ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது, ஒழுங்கு செய்வது குறித்த அவசியம் தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உளவியல் நிபுணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையக்கூடிய தீமையை பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர். சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
    
வரைமுறையற்று ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் கற்றல் குறைபாடுகள் மற்றும் பல சமூக ஒழுக்க குறைபாடுகள் ஏற்படுவதாக அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்தது.

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது, ஒழுங்கு செய்வது தொடர்பான கருத்துக்களை பகிர விரும்புவோர் குறிப்பாக பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துக்களை கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடம் இன்று கருத்து கேட்பு கூட்டம் உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி தலைமையில் நடைபெறுகிறது. ஆன்லைன் விளையாட்டு பற்றிய கருத்துக்களை பகிர விரும்பும் பொதுமக்கள் homesesi@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!