முகநூல் பதிவு கைதுகளை நிறுத்த வேண்டும்!

முகநூல் பதிவுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு அநாவசியமான கைதுகளும் அச்சுறுத்தல்களும் கொழும்பில் இடம்பெற்று வருகின்றன. உடனடியாக இத்தகைய அநீதியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்பில் ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்தார்.
  
பாராளுமன்றத்தில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை வைத்துக்கொண்டு முகநூல் மூலம் படங்கள், தகவல்களை திரட்டி கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இளைஞர்கள் அநீதியான முறையில் கைது செய்யப்படுகிறார்கள்.

அவ்வாறான இளைஞர்களின் விபரங்கள் பெறப்பட்டு அவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றார்கள். இத்தகைய நடவடிக்கைகளை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

இதுவே பொலிசாரின் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் . அது தொடர்பில் ஜனாதிபதி உரிய கவனம் செலுத்த வேண்டும் .

மே ஒன்பதாம் திகதி வரை மிகவும் அமைதியான முறையிலேயே ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பதை அனைவரும் அறிவர். அந்த ஆர்ப்பாட்டத்தை அவதானித்த சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் இது உலகிற்கே ஒரு ‘மொடல்’ என வரவேற்றனர்.

ஜனாதிபதி மாளிகைக்குச் சென்ற பொலிஸார் அங்கு பியானோ வாசிப்பதையும் ஜிம் பயிற்சிகளில் ஈடுபடுவதையும் நாம் காண முடிந்தது.

அவ்வாறிருக்கையில் சாதாரண மக்கள் ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லும் போது இத்தகைய ஆசைகள் வருவது இயல்பே. அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு இளைஞர்கள் கைது செய்யப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் தவறானது.

அத்துடன் நாம் வன்முறையை ஆதரிப்பவர்கள் அல்ல. அந்தவகையில் இத்தகைய அச்சுறுத்தல்கள் கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என கூறப்படுகின்றபோது இத்தகைய செயற்பாடுகள் அதற்கு பாதிப்பாகவே அமையும். இதனை அரசாங்கமும் ஜனாதிபதியும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!