உதயங்க வீரதுங்க வெளிநாடு செல்ல முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க, வெளிநாடு செல்ல முன் வைத்த கோரிக்கையை கோட்டை நீதிவான் நீதிமன்றம்  நிராகரித்துள்ளது.

கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் நேற்று இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மிக் விமான ஊழல்

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சர்ச்சைக்குரிய மிக் விமான ஊழலில் சந்தேக நபர்களில் ஒருவராக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்நிலையி்ல் வெளிநாட்டில் நடைபெறவுள்ள கருத்தரங்கொன்றில் கலந்து கொள்ள அனுமதி வழங்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நகர்வு மனுவொன்றின் மூலம் உதயங்க வீரதுங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எனினும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் முழுமையாக இல்லை என்ற காரணத்தைக் காட்டி உதயங்க வீரதுங்க இதுவரை முழுமையான வாக்குமூலம் வழங்கவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது.

வாக்கு மூலம் வழங்குமாறு உத்தரவு

அதன் காரணமாக அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டால் வழக்கு விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்று பொலிஸார் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உதயங்க வீரதுங்கவின் வெளிநாடு செல்வதற்காக முன் வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. 

அத்துடன் இவ்விசாரணைகளுக்கு முழுமையான வாக்கு மூலம் ஒன்றினை வழங்க எதிர்வரும் 17 ஆம் திகதி சி.ஐ.டி.யில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!