தமிழகத்தில் முதல் முறையாக நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் திருவிழா!

தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத் துறை மூலம் மாமல்லபுரத்தில் நாளை (சனிக்கிழமை) சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடக்கிறது. இதனை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். இந்த பட்டம் விடும் திருவிழா வருகிற 15-ந்தேி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் வெளி நாட்டைச் சேர்ந்த 4 குழுக்கள் உள்பட 10 குழுக்கள் கலந்து கொள்கின்றன.
    
விழா மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இதற்காக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 15 ஏக்கரில் கடல் மணல்பரப்பு தயாராகி வருகிறது. தரையில் உள்ள மேடுபள்ளங்களை சமப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ராட்சத பட்டங்கள் 100 அடிக்கு மேல் பறக்க விடப்படும் என்பதாலும் அருகே இருக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. விழா நடைபெறும் 3 நாட்களும் நடன நிகழ்ச்சி, இசைவிழா, பேஷன் ஷோ, உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு கேளிக்கைகள் நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். நிகழ்ச்சிக்கு www.tnikf.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!