சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் உடன்படிக்கை: மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டுவதற்கு, நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள், இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த முனைப்புகள், நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டியதன் பின்னர், கடன் மறுசீரமைப்பில் கடன் வழங்குநர்களுடன், பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த பணியாளர் மட்டும் உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் நாட்டின் இயல்பற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக அது காலந்தாழ்த்தப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான பணிக்குழாம் மட்ட உடன்பாட்டுக்கான நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில் முன்னெடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!