வடகொரியாவில் இருந்து தப்பிக்க முயன்ற வீரர் மீது சக நாட்டு ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு!

வடகொரியாவில் இருந்து தப்பிக்க முயன்ற ராணுவ வீரரை சக ராணுவ வீரர்களே சுட்டு வீழ்த்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவில் இருந்து தப்பிக்க முயன்ற ராணுவ வீரர் ஒருவர், பல தடைகளை கடந்து ஜீப் ஒன்றின் மூலம் ராணுவ விலக்கல் மண்டலம் வந்து அங்கிருந்து தென்கொரியாவுக்குள் தப்பிக்க முயன்றுள்ளார். இதை அறிந்த வடகொரிய ராணுவ வீரர்கள் எல்லையில் அவரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். ராணுவ விலக்கல் மண்டலம் என்பது வடகொரியா மற்றும் தென்கொரியாவின் இடையில் அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களைக் கொண்டு பாதுகாக்கப்படும் எல்லையாகும்.

இந்நிலையில் குண்டடி பட்ட ராணுவ வீரர் தென்கொரிய எல்லைக்குள் விழுந்துவிட்டதால் அவரை வடகொரிய ராணுவ வீரர்கள் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். இந்த காட்சிகள் தென்கொரிய எல்லையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்த்து சம்பவ இடத்துக்கு சென்ற தென்கொரிய ராணுவ வீரர்கள், காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு 2 முறை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 1953ம் ஆண்டு வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான போர் சமாதானத்துடன் முடிந்தது. ஆனாலும் சமாதான ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படாததால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வடக்கில் இருந்து தென் கொரியாவிற்கு தப்பி செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,