ஜனாதிபதியின் மற்றுமொரு தீர்மானம்:உருவாக்கப்படும் அமைச்சருக்கு நிகரான அதிகாரமிக்க பதவி

புதிதாக நியமிக்கப்படும் நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்பு தெரிவுக்குழுவின் தலைவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு நிகரான அதிகாரத்தை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.இதனடிப்படையில், தேவையான சந்தர்ப்பங்களில் அவர்கள் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துக்கொள்ள முடியும். நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்பு தெரிவுக்குழுக்களை நியமிக்கும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை தவிர மேலும் உப குழுக்களை நியமிக்க வேண்டிய அவசியம் குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளது.முழு நாடாளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை திட்டத்திற்கு அமைய கண்காணிப்பு தெரிவுக்குழு மற்றும் தேசிய பேரவை என்பன நியமிக்கப்பட்டு அதனுடான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும

கண்காணிப்பு தெரிவுக்குழுக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர தலா 5 இளம் பிரதிநிதிகளை நியமிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வாறான அரசாங்கம் சார்ந்த தெரிவுக்குழுவில் இளைஞர்களை பங்குபெற செய்யும் முதல் நாடாக இலங்கை பதிவாகும். தேசிய பேரவையானது அனைத்து கட்சிகள் மற்றும் குழுக்கள் அங்கம் வகிக்கும் வகையில் ஸதாபிக்கப்படும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 22 வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், இந்த புதிய முறை நடைமுறைக்கு வரும்.முழு நாடாளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றும் போது தெரிவுக்குழுக்களில் அங்கம் வகிப்பதா அல்லது அரசாங்கத்தில் இணைவதா என்ற முடிவை தமக்கு அறிவிக்குமாறு சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது ஜனதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!