ரணில் அரசாங்கம் நரகத்திற்கான இடைவேளையில் இருக்கின்றது-ரில்வின் சில்வா

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் நரகத்திற்கான இடைவேளையில் இருப்பதாகவும் இந்த இடைவேளையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.நுகேகொடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபய சென்ற பின்னர் ரணில் வந்ததும் போராட்டம் சற்று ஓய்வுக்கு வந்தது. அந்த ஓய்வில் பொலிஸார் பொல்லுகளை தூக்க ஆரம்பித்துள்ளனர். அடக்குமுறையை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

நீங்கள் நரகத்தின் இடைவேளையில் இருக்கின்றீர்கள் என்றே எம்மால் அவர்களுக்கு கூறமுடியும். நீண்ட நேரம் இந்த இடைவேளை நீடிக்காது. தேசிய மக்கள் சக்தியின் தலைமை இந்த இடைவேளையை மிக விரைவில் முடிவுக்கொண்டு வந்து மக்கள் ஆட்சியை ஏற்படுத்தும்.

ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தை நோக்கி பார்த்து பாட்டுப்பாடி கொண்டிருக்கின்றார். இதனால் பதில் இல்லை. பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த திட்டங்களும் இல்லை.
ராஜபக்சவினரின் வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவான ரணில்

ராஜபக்சவினரின் வாக்குகளால் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க திருடர்கள், குற்றவாளிகளுடன் அடுத்த மூன்று ஆண்டுகளை முன்னெடுத்துச் செல்ல முயற்சித்து வருகிறார்.
நாட்டில் பிரச்சினைகள் இருக்கும் போது நாடாளுமன்றத்தை கலைக்காது மூன்று ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் சென்றால் என்ன நடக்கும்?. இன்னும் மூன்று ஆண்டுகள் காத்திருக்க முடியுமா? முடியாது.

நாம் அதற்கு தயாராக இருக்கின்றோமா?. இல்லை. மூன்று ஆண்டுகள் அல்ல மூன்று மாதங்கள் கூட காத்திருக்க முடியாது. அதற்கு நாங்கள் தயாராகவும் இல்லை.இதனால், பொருட்களை எடுத்துக்கொண்டு தனது அணியினருடன் பதவியில் இருந்து விலகி செல்லுமாறு ரணிலிடம் நேரடியாக கூற நாங்கள் தயார்.

நாடாளுமன்றத்தை கலைத்து, தேர்தலை நடத்தி மக்களுக்கு ஆணையை வழங்குவதற்கான சந்தர்ப்பதை ஏற்படுத்திக்கொடுங்கள் எனவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.