நாட்டை கட்டியெழுப்ப இதுவே இறுதி சந்தர்ப்பம்:இதனை கைநழுவ விடக்கூடாது-துமிந்த திஸாநாயக்க

நாட்டை கட்டியெழுப்ப கிடைத்திருக்கும் இறுதியான சந்தர்ப்பம் இதுவாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நான் மிகவும் மகிழ்ச்சியுடன் பேசுகிறேன். இந்த நாள் உதயமாகும் வரை நாங்கள் 2015 ஆம் ஆண்டில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தோம் என்பதே இதற்கு காரணம். ஆனால், எமக்கு சரியாக செய்ய முடியாமல் போனது.

எனினும் விதியின் விளையாட்டோ என்னவோ, அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து பிரிந்து உருவாகிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி உங்களை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளது.

வரலாற்றை திரும்பி பார்க்கும் போது நான்கு ஆண்டுகள் வீணாகி போனதோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஜனாதிபதி அவர்களே நாட்டை கட்டியெழுப்ப எமக்கு கிடைத்த இரண்டு சந்தர்ப்பங்களை நாம் இல்லாமல் செய்துக்கொண்டோம்.

சுனாமி அனர்த்தத்தின் பின்னர் நாட்டை கட்டியெழுப்பி இருக்கலாம். அன்று அனைவரும் கட்சி பேதங்களை மறந்து கைகோர்த்தனர். எனினும் நாம் அந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டோம்.

போருக்கு பின்னர் இரண்டாவது சந்தர்ப்பம் கிடைத்தது. எனினும் அதனையும் நாம் நழுவவிட்டோம். தற்போது கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பமானது எனது வாழ்நாளிலும் உங்களது வாழ்நாளிலும் இறுதியான சந்தர்ப்பமாகும்

இந்த சந்தர்ப்பம் கைநழுவி போனால், அடுத்த ஜென்மத்திலேயே மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும். எமது அரசாங்கத்தில் உங்களை கேலி செய்தோம்.

ஆனால், நீங்கள் சும்மா இருக்கவில்லை. நீங்கள் ஹோம் வேர்க் செய்தீர்கள். இதனால், உங்களிடம் பிரச்சினைக்கு தீர்வு இருக்கின்றது எனவும் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!