நாட்டுக்கு எதிரான சூழ்ச்சிகள்! உதய கம்மன்பிலவிடம் உள்ள சாட்சியங்கள்

கடந்த மே 9 ஆம் திகதி முதல் ஜூலை 12 ஆம் திகதி வரை நாட்டுக்குள் நடந்த வன்முறைகள் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக உடனடியாக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படுமாயின் வன்முறைகளுக்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் சாட்சியங்களுடன் தகவல்களை வழங்க தயார்.

வன்முறைகள் ஏற்பட காரணம், அவற்றின் பின்னணியில் இருந்தது யார் என்பதை கண்டறிய உடனடியாக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு நாங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அரசாங்கத்திற்கு உள்ளேயும் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன

நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்லும் சூழ்ச்சிகளை நாட்டிற்குள், நாட்டுக்கு வெளியிலும் உள்ள சக்திகள் மாத்திரமன்றி, அரசாங்கத்திற்கு உள்ளேயும் அப்படியான சக்திகளும் மேற்கொண்டன என்பது மிகவும் தெளிவானது.

ஊழல், மோசடிகள், கவனமின்மை மற்றும் வேண்டும் என்றே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்பன மக்கள் தற்போது எதிர்நோக்கும் கஷ்டங்களுக்கு காரணம்.

ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டால், தவறான முடிவுகளை எடுத்து நாட்டை இந்த நிலைமைக்கு தள்ளியவர்கள், கவனமின்றி தவறான முடிவுகளை எடுத்தவர்கள் யார் என்பதை சாட்சியங்களுடன் வெளியிட தயாராக இருக்கின்றேன் எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!