உணவு விலை பணவீக்கத்தில் இலங்கை 5 வது இடத்தில்:உலக வங்கி

உலகில் அதிகளவில் உணவு விலை பணவீக்கம் காணப்படும் நாடுகளில் இலங்கை 5 வது இடத்தில் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கையின் அடிப்படையில், உலகில் மிக அதிகளவிலான உணவு விலை பணவீக்கம் கொண்ட நாடாக லெபனான் காணப்படுகிறது.

சிம்பாப்வே, வெனிசூலா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இலங்கையை விட உச்சத்தில் இருக்கின்றன. இதனடிப்படையில் லெபனான் முதல் இடத்திலும் சிம்பாப்வே இரண்டாவது இடத்திலும் வெனிசூலா மூன்றாவது இடத்திலும் துருக்கி நான்காவது இடத்திலும் இருக்கின்றன.
இதனிடையே தேசிய நுகர்வோர் விலை சுட்டெணுக்கு அமைய கடந்த ஜூலை மாதம் இலங்கையின் பணவீக்க வேகம் 66.7 வீதமாக அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது கடந்த ஜூன் மாதம் காணப்பட்ட பணவீக்க வேகத்துடன் ஒப்பிடும் போது, 7.8 வீத அதிகரிப்பு.
இதனிடையே ஜூலை மாதம் உணவு விலை பணவீக்கம் 82.5 வீதமாக அதிகரித்துள்ளதுடன் கடந்த ஜூன் மாதம் உணவு விலை பணவீக்கம் 75.8 வீதமாக காணப்பட்டது எனவும் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பணவீக்கம் காரணமாக அத்தியவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் அல்லாத பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. இதனால், மக்கள் பெரும் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!