ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்காக இலங்கை வரும் ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் இலங்கை வருகை தரவுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த தாக்குதல் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சுயாதீன விசாரணை நடாத்தும் நோக்கில் ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் இலங்கை வருகை தரவுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் சுயாதீனமான விசாரணைகள் நடாத்தப்படவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸாரை அழைத்து சுயாதீன விசாரணை நடாத்த தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதி செயலக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.