டெக்சாஸில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட புலம்பெயர்ந்தோர்!

டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த டசின் கணக்கான புலம்பெயர்ந்தோரை பேருந்துடன் வலுக்கட்டாயமாக நியூயார்க் சிட்டிக்கு அனுப்ப முயன்ற சம்பவத்தில், பயத்தில் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடனின் எல்லைக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் மூலம் டசின் கணக்கான புலம்பெயர்ந்தோர் நியூயார்க் சிட்டிக்கு வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டனர்.
 
அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையின் தகவலின்படி, மே மாதத்தில் எல்லையில் திரண்டவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியனைத் தாண்டியதால், அபோட் வாஷிங்டன் DC க்கு குடியேறியவர்களை அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 13ம் திகதி Chattanooga பகுதியில் வைத்து புலம்பெயர் நபர் ஒருவர் தங்களை விடுவிக்கும்படி பயத்தில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். பேருந்தில் இருந்த புலம்பெயர்ந்தோர், வெவ்வேறு இடங்களுக்கு செல்ல இருப்பதாகவும், டென்னசியில் இறங்கி விமான நிலையத்திற்குச் சென்று மீண்டும் குடும்பத்துடன் சேரத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் Chattanooga பகுதியில் வைத்து தங்கள் பேருந்தை சிலர் முடக்கியதாகவும், தங்கள் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக நியூயார்க் சிட்டிக்கு அனுப்பி வைக்க முயன்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனிடையே தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், தொடர்புடைய பேருந்தை தவற விட்டாலும், சில பேருந்துகளில் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்களை மீட்டுள்ளனர்.

இதனிடையே டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட்டின் செய்தித்தொடர்பாளர் தெரிவிக்கையில், டெக்சாஸில் இருந்து 20 பேருந்துகள் நியூயார்க் நோக்கி புறப்பட்டுள்ளதாகவும் மேலும் பல எண்ணிக்கையில் புறப்பட உள்ளன எனவும் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை நிலவரப்படி, 7,200 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் டெக்சாஸிலிருந்து வாஷிங்டன் பகுதிக்கு 175 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.