அரிசி இறக்குமதியை நிறுத்துவதே இலக்கு!

நாட்டில் தற்போது 5 இலட்சம் ஹெக்டயருக்கும் அதிக நிலப்பரப்பில் நெற் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இவ்வருட இறுதி வரை அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

படிப்படியாக நெற் செய்கையை அதிகரித்து அடுத்த ஆண்டு பெப்ரவரியின் பின்னர் அநாவசிய அரிசி இறக்குமதியை நிறுத்துவதே தமது இலக்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உணவு பணவீக்கம் அதிகமாகவுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை 5 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.எனவே இதனைக் கருத்திற் கொண்டு உள்நாட்டில் பயிற்செய்கை மற்றும் உணவு உற்பத்திக்கான வேலைத்திட்டங்களை மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து நாம் ஒவ்வொருவருமே முயற்சிக்க வேண்டும்.

இந்த சவாலை ஏற்பதற்கு தாம் தயார் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதற்கு அவர்களுக்கான எரிபொருள் மற்றும் உர நிவாரணத்தை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்போது 512 000 ஹெக்டயர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த போகத்தில் 248 000 ஹெக்டயர் நிலப்பரப்பில் மாத்திரமே பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் அதனை இரு மடங்கு அதிகரிப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது.
இவ்வாறு நெற் செய்கை அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் செப்டெம்பர் இறுதியில் வரவிருந்த அரிசி தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் அல்ல , டிசம்பர் இறுதிவரை அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது என்று உறுதியாகக் கூற முடியும். அடுத்த போகத்தில் நெற் செய்கையை மேலும் அதிகரித்து , அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின்னர் அரிசி இறக்குமதியை முற்றாக நிறுத்த வேண்டும் என்பதே எமது இலக்காகும்.

இவை தவிர சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தானிய உற்பத்தியை அதிகரிக்கும் போது விலங்குணவுகளுக்காக நெருக்கடியைக் குறைத்துக் கொள்ள முடியும். அதற்கமைய முட்டை மற்றும் கோழி என்பவை தொடர்பில் காணப்படும் சிக்கலுக்கும் தீர்வு காண முடியும். தற்போது நாட்டில் 99 சதவீதம் மிளகாய் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். எனவே தானியங்கள் மற்றும் மிளகாய் உள்ளிட்டவற்றில் தன்னிறைவடைவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியைப் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பார்களாயின் , அதனால் நுகர்வோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நெல் விநியோக சபை குறிப்பிட்டளவு நெல்லை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தியுள்ளது.

எனவே அரிசி தட்டுப்பாடு தொடர்பில் மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சோளம் மற்றும் தேயிலை என்பவற்றுத் தேவையான உரத்தை விநியோகிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!