இலங்கை அரசின் வருமானத்தை விட புலம்பெயர் தமிழர்களின் வருமானம் அதிகம்

புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களின் வருமானம் இந்த அரசாங்கத்தினுடைய வருமானத்தை விட அதிகமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறினார்.  

தொடர்ந்தும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் இரண்டு தேசங்கள் இல்லை என்று நடத்திய போர், இன்று இந்த நாட்டையே அழித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.  இந்த நாட்டிற்குள் இரண்டு தேசங்கள் உருவாகுவதனை மறுப்பதற்கு எடுத்த கடன் இன்று இந்த அரசாங்கத்தை வங்குரோத்து நிலைக்கு தள்ளியிருக்கின்றது. 

இன்று இந்த அரசாங்கம் எந்தளவு  விழுந்திருக்கின்றது என்றால் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களின் வருமானம் இந்த அரசாங்கத்தினுடைய வருமானத்தை விட அதிகமாக உள்ளது.  
இது ஒரு பல்தேசம் கொண்ட நாடு, ஆனால் இந்த நாட்டில் வரவு செலவுத் திட்டத்தில் 19 வீதம் தேசிய பாதுகாப்புக்காக ஒதுக்கப்படுகின்றது.  இவை மிக அதிகம். தமிழனை எதிரியாக பார்க்கின்றபடியால் தான் இந்த நிலை ஏற்படுகின்றது.   தமிழ்த் தேசத்தை ஏற்றுக்கொள்ள நீங்கள் ஏற்றுக்கொள்ளாத படியால் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.  

கோட்டாபய ராஜபக்ச எந்தளவுக்கு பிழையென்று அன்று தமிழர்கள் கூறினார்கள்.  ஆனால் அன்று சிங்கள தேசம் அதனை நம்பவில்லை.  இன்று இந்த சிங்கள தேசத்தையே அவர் அழித்துள்ளார்.  
சிங்களவர்களின் கண்ணுக்கு முன்னாலேயே அவர்களை கோட்டாபய கொள்ளையடித்துள்ளார்.  அப்போது தமிழர்களுக்கு எந்தளவு கொடுமைகளை செய்திருப்பார்.  

உலகத்திற்கே தெரியாத வகையில் யுத்த களத்தில் அவர் எவ்வாறு நடந்திருப்பார் என்பதை சிந்தியுங்கள். இந்த கேள்வியை சிங்களவர்கள் கேட்டால் பதில் கிடைக்கும், ஆனால் இந்த கேள்வியை நீங்கள் கேட்கவில்லை என்றால் இனவாதத்தால் தான் நீங்கள் கேட்கவில்லை என்று அர்த்தம்.  இலங்கையின் இந்த நிலைக்கு இந்த மனப்பாங்கும் காரணம் . 

73 வருடமாக இலங்கையில் ஒற்றையாட்சி முறையைத் தானே வைத்திருந்தார்கள்.   அதில் அரைவாசி காலம் பிரிவினையை நோக்கித்தானே  போராட்டமே நடந்தது.  ஒற்றையாட்சியை  வைத்திருந்தபடியால் தானே இந்த போராட்டம் நடந்தது.  அந்த போராட்டத்தினால் தானே கடனுக்குள் மூழ்கிப் போய் இந்த இடத்திற்கு நாடு வந்திருக்கின்றது.  

73 வருடமாக இந்த நாட்டை அழித்த ஒரு கட்டமைப்பு தொடர வேண்டும் என்று நினைப்பது படு முட்டாள் தனம்.  அதே கட்டமைப்பு போர் முடிந்து 15 வருடத்தில் நாட்டை செங்குத்தாக கீழிறக்கியிருக்கின்றது.  அதனை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.  தமிழ்  தேசம் மற்றும் சிங்கள தேசம் என்ற இரண்டு இந்த நாட்டுக்குள் இருக்கின்றது என்ற யதார்த்தம் அங்கீகரிப்பதன் ஊடாக மாத்திரம் தான் இந்த நாடு முன்னேறும் என்பதுதான் என்னுடைய பார்வை.  
இந்தியாவும் தமிழர் தரப்பும்

இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ள தீவு, இந்தியா அயல் நாடு, அத்துடன் அது பிராந்திய வல்லரசு மாத்திரம் அல்லாம் உலக வல்லரசாக மாற்றம் பெறப்போகும் ஒரு நாடு.
இந்தியாவைத் தவிர்த்து இலங்கையில் அரசியல் செய்யலாம் என்று எதிர்பார்ப்பது பகல் கனவு,  அது மட்டுமல்லாமல்  தமிழ் தேசத்தைப் பொறுத்தமட்டில்  தமிழ் தேசம் இந்தியாவுக்கு பக்கத்தில் இருக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு  தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் வரும் பட்சத்தில் ஒரு நாளும் தமிழ் தேச மண்ணை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம்.  இதற்காக இந்தியா கூறுவதை கண்ணை மூடிக் கொண்டு கேட்கவும் முடியாது.  
புலிகளை அழிக்க சீனாவை நாடிய இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என்ற சித்தாந்தம் அரசுக்கு இருந்தபடியால்  சீனாவை அவர்கள் நாடினார்கள்.  ஏனெனில் அவர்கள் தான் நிபந்தனைகளின்றி  கடன் வழங்குவார்கள். 
அதன் விளைவுகள் என்ன? எங்கே கொண்டு வந்து அதனை நிறுத்தியிருக்கின்றது என்பதை நாங்கள் பார்க்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!