நுளம்புகளை வைத்தே நுளம்புகளுக்கு வேட்டு: – மரபணு மாற்றத்தில் புதுயுக்தி

மலேரியா முதல் இப்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் வரை எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது ‘தம்மாத்துண்டு’ கொசு. இவற்றை ஒழிக்க ஒவ்வொரு நாடும் ராணுவ பட்ஜெட்டுக்கு இணையாக பல ஆயிரம் கோடியை செலவிடுகின்றன. ஆனால், வெற்றி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. கொசுவை ஒழிக்க என்ன வழி என்று அமெரிக்கா சமீபத்தில் யோசித்தபோது, கொசுவை ஒழிக்க கொசுப்படையை உருவாக்குவது என்ற திட்டம் உதித்தது. பெரும்பாலும் பெண் கொசுக்கள்தான் மனிதர்களை கடித்து நோய்களை பரப்புகின்றன. இந்த பெண் கொசுக்களை ஒழிக்க, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தக்கட்டமாக, கொசுக்களுக்கு நோய் பரப்பும் கொசுக்களை மரபணு மாற்றத்தின் மூலம் உருவாக்கும் புதிய திட்டம் உருவாகியுள்ளது.

இதற்காக விஞ்ஞானிகள் கையில் எடுத்திருக்கும் ஆயுதத்தின் பெயர் ‘கிரிஸ்பர் தொழில்நுட்பம்’. இதன்மூலம், கொசுக்களின் மரபணுவில் மாற்றம் செய்து உருவத்தால் மட்டுமின்றி, குணத்தாலும் கொசுவின் தன்மை மாற்றப்படும். இதற்காக, கொசுவின் மரபணு கற்றையில் ‘காஸ்9’ என்ற புரதச்சத்து பயன்படுத்தப்பட உள்ளது. இந்த புரதச்சத்துடன் உருவாக்கப்படும் கொசுக்கள், நோய்களை பரப்பும் கொசுக்களுடன் இணைந்து, அவற்றின் இனப்பெருக்கம், நோய் பரப்பும் தன்மை போன்றவற்றை சீர்குலைத்து ‘செல்லாக்காசு’ ஆக்கிவிடும். இதன் மூலம், காலப் போக்கில் நோய்களை பரப்பும் தன்மையில்லாத கொசுக்களின் தலைமுறை உருவாகிவிடும் என்பது விஞ்ஞானிகளின் கணக்கு.

இந்த வகையில் முதல் வெற்றியும் கிட்டியுள்ளது. சிக்குன்குனியா நோயை ஏற்படுத்தக் கூடிய ‘ஏசிடெஸ் எகிப்தி’ கொசுவின் மரபணுவை மாற்றி, அதன் உருவத்தை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த மரபணு மாற்றத்தின் மூலம், வழக்கமாக கருப்பாக இருக்கும் அதன் கண்கள் வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளன. பறக்க முடியாத இறக்கைகள், ரத்தத்தை உறிஞ்ச முடியாத நுண்குழல் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ளையாக இருக்கும் அதன் உடல் நிறம் மஞ்சளாக மாறி இருக்கிறது. அதோடு, கூடுதல் கண்கள், கால்களும் முளைத்துள்ளன. இதுபோல் உருவாகும் கொசுக்கள் நீண்டநாள் வாழாது என்பது மட்டுமின்றி, எதிர்காலத்தில் அந்த இனமே அழிந்து விடும் என கருதப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,