தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் எதிரணி உறுதி: ராஜித சேனாரத்ன

“தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அடங்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற விடயங்களில் எதிரணியினராகிய நாம் உறுதியாக இருக்கின்றோம்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும், அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அடங்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களில் எதிரணியினராகிய நாம் உறுதியாக இருக்கின்றோம்.
இந்த விடயங்கள் நிறைவேற்றப்பட்டால் பொருளாதார நெருக்கடியும் நீங்கும். ஏனெனில் இந்த விடயங்களில் வெளிநாடுகளும் சர்வதேச அமைப்புகளும் உறுதியாக உள்ளன.

அவை நிறைவேறியவுடன் சர்வதேச சமூகம் தாமாகவே முன்வந்து எமது நாட்டுக்கு உதவி வழங்கும்.

புலம்பெயர் தமிழ் மக்களும் எந்தவித அச்சமும் இன்றி நாட்டுக்கு வந்து முதலீடுகளை வழங்கி உதவி செய்வார்கள். ஆனால், மேற்படி விடயங்களை நிறைவேற்றி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பகத்தன்மையுடன் செயற்படுவாரா என்பது கேள்விக்குறி.

ராஜபக்சக்களின் ‘மொட்டு’க் கட்சியினரின் செல்லப்பிள்ளையான ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சக்களின் சொற்படியே நடக்கின்றார். அதனால்தான் ஜனாதிபதியை நாம் எதிர்க்கின்றோம்” என்றார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!