சென்னையில் மறைத்து வைத்திருந்த 300 ஆண்டு பழமையான சாமி சிலைகள் மீட்பு!

சென்னை அண்ணாநகர் 5-வது மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பழமையான சிலைகளை மறைத்து வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ரவி தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், வசந்தி உள்ளிட்ட தனிப்படை போலீசார் அங்கு சோதனை நடத்தினர்.
    
சோதனையின்போது, அமர்ந்த நிலையில் இருந்த மாரியம்மன் சிலை, நடனமாடும் நடராஜர் சிலை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, தனது தந்தை காலம் முதலே அந்த 2 சிலைகளும் தங்கள் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், சிலை எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்த ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.

சிலைகளை போலீசார் ஆராய்ந்தபோது, திருவிழா காலங்களில் பல்லக்கில் எடுத்து சென்ற அடையாளங்கள் அதில் இருந்தன. இதனால் அந்த சிலைகள் கோவில்களில் வைக்கப்பட்டிருந்தது உறுதியானது. முறையான ஆவணங்கள் இல்லாததால், அந்த 2 சிலைகளையும் போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாரியம்மன் உலோக சிலை 40 கிலோ எடையிலும், நடராஜர் உலோக சிலை 13 கிலோ எடையிலும் இருந்தது.

இந்த சிலைகள் எந்தெந்த கோவில்களுக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சிலைகளை ஆய்வு செய்த தொல்லியல் துறை நிபுணர் ஸ்ரீதரன், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தெரிவித்தார். இந்த சிலைகள் சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!