ஜெனிவா நெருக்கடியிலிருந்து அரசைக் காப்பாற்றுவோம்: சஜித் உறுதி

ஜெனிவாவில் இலங்கைக்குக் காத்திருக்கும் நெருக்கடிகள் தொடர்பில் நாம் அரசுக்கும் நாட்டுக்கும் சார்பாகவே செயற்படுவோம்”என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் பெரிய பிரச்சினைகள் உள்ளன. இவ்வாறான நிலையில் நாடு தற்போதும் மிகப்பெரும் அபாய நிலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றது.

இந்த மாதம் ஜெனிவாவில் இலங்கைக்குப் பெரிய நெருக்கடிகள் காத்திருக்கின்றன. ஜெனிவா நெருக்கடிகளைப் பொறுத்தவரையில் நாம் அரசுக்கும் நாட்டுக்கும் சார்பாகவே செயற்படுவோம்.
நாம் மற்றவர்களைப் போன்று பெட்டிகளுடன் ஜெனிவாவுக்குச் செல்ல மாட்டோம். எமது நாட்டைப் பற்றி ஒருபோதும் வெளிநாடுகளுக்குப் புறம் சொல்லவோ முறையிடவோ மாட்டோம். நாட்டுக்காகவே செயற்படுவோம்” என கூறியுள்ளார்.

இதேவேளை, ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் வந்தாலும் அது சவாலாக அமையாது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். மேலும் ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையின் நிலைப்பாட்டை அரசு சமர்ப்பிக்கும். இந்த மாநாடு இலங்கைக்கு சவாலாக அமையாது என்றே நாம் கருதுகின்றோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!