சர்வதேச விசாரணைகள் அவசியம்!

மக்கள் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை விடுத்து மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்களை தாக்கிய குண்டர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.
   
கடந்த மே 9 ஆம் திகதி காலி முகத்திடலில் அமைதியான முறையில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி மக்கள் பேரவையால் இலங்கை மனித ஆணைக்குழுவில் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டது.

இதன்போது வருகை தந்திருந்த ஓமல்பே சோபித்த தேரர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
நாட்டில் உள்ள அனைத்து மக்களும் போராட்டங்களை செய்தனர். வாழ்வதற்கான உரிமையை வழங்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி போராட்டத்தில் பங்குபற்றிய அப்பாவி மக்களை கைது செய்து வருகிறார்கள்.போராட்டகாரர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றது. இது பாரதூரமான குற்றமாகும்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் எவரும் பயங்கரவாதிகள் கிடையாது. மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது ஏன் இன்னும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதன்போது போராட்டக்காரர்களை தாக்கிய குண்டர்கள் கைது செய்யப்பட வேண்டும்.மேலும் போராட்டத்தினை ஒடுக்குவதன் ஊடாக மனித உரிமைகள் மீறப்படுவதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியமாகும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!