வருமானத்தை முகாமைத்துவம் செய்தால் நெருக்கடிக்கு நிலையான தீர்வு காணலாம்!

தேசிய இறைவரி திணைக்களம்,மதுவரி திணைக்களம் மற்றும் சுங்க திணைக்களம் ஆகியவற்றின் வருமானத்தை முறையாக முகாமைத்துவம் செய்தால் நாட்டின் நிதி நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியும். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், தனியார் வகுப்பு ஆசிரியர்களில் எத்தனை பேர் வருடாந்த வரி செலுத்துகிறார்கள்.
   
மத்திய வங்கி,திறைச்சேரியின் முக்கிய பதவிகளில் உள்ளோர் பெறும் மாத சம்பளத்தை வெளிப்பபடுத்தினால் அவர்களுக்கு வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலை ஏற்படும் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்தார்.பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு-செலவு திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தின் பேர்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் ஜனாதிபதி திருத்தப்பட்ட இடைக்கால வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.தற்போதைய தீர்மானமிக்க நிலையில் 225 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதை எதிரபார்க்கிறேன். சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவு திட்டத்தில் அரச வருமானம் 2054 பில்லியன்,அரச செலவு 4400 பில்லியன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வருமானத்திற்கும்,அரச செலவிற்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது.வரி அதிகரிப்பு தவறானது,நிவாரனம் வழங்க வேண்டும்,என பல்வேறு விடயங்களை எதிர்தரப்பினர் தற்போது குறிப்பிடுகிறார்கள். அபிவிருத்தி,நிவாரனம் மற்றும் தொழில் வழங்கல் தொடர்பில் குறிப்பிடுபவர்கள் அதற்கான நிதி எப்படி திரட்டிக் கொள்ளப்படுகிறது என்பது குறித்து கவனம் செலுத்தவில்லை.பொருளாதா நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் சகல தரப்பினரும் இனியாவது ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

நட்டமடையும் அரச நிறுவனங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.கடந்த 2021ஆம் ஆண்டு மாத்திரம் இலங்கை மின்சார சபை 99 பில்லியனையும்,இலங்கை பெற்றோலிய கூட்;டுத்தாபனம் 84 பில்லியனையும்,ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனம் 143 பில்லியனையும்,புகையிரத திணைக்களம் 45 பில்லினனையும்,நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை 3.2 பில்லியனையும் நட்டமாக எதிர்கொண்டுள்ளன.

பிரதான அரச நிறுவனங்கள் ஐந்தும் ஒரு வருடத்திற்கு மாத்திரம் சுமார் 324 பில்லியன் நட்டத்தை எதிர்கொள்ளும் போது எவ்வாறு அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல முடியும்.ஆகவே இந்த நிறுவனங்கள் குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டும்.

அரச வருமானம் தொடர்பில் அமைச்சரவை அமைச்சினை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.தேசிய இறைவரி திணைக்களம்,மதுவரி திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் ஆகியவற்றை முறையாக முகாமைத்துவம் செய்தால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது அவசியமற்றதாகும்.எமது நாட்டில் உள்ள அரச வருமானத்தை முறையாக முகாமைத்துவம் செய்தால் பல பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காண முடியும்.

நாட்டில் நான்கு பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளார்கள் .இவர்கள் ஒரு போகத்திற்கு மாத்திரம் சுமார் 50 பில்லியன் வருமானத்தை பெறுகிறார்கள்,ஆனால் வருடத்திற்கு 9 இலட்சம் மாத்திரம் தான் வரி செலுத்துகிறார்கள்.தேசிய இறைவரி திணைக்களம் என்ன செய்கிறது.இவ்விடயம் குறித்து ஏன் அவதானம் செலுத்தவில்லை.

மறுபுறம் மதுபான விற்பனைக்கான அனுமதி பத்திரம் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது.ஒரு மதுபான நிலையம் ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் முதல் 75 ஆயிரம் வரை வருமானம் பெற்றுக்கொள்ளும் போது வருடாந்தம் அவர்கள் இரண்டரை இலட்சம் தான் வரி செலுத்துகிறார்கள்.

நாடு தழுவிய ரீதியில் 1800 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன.ஒரு எரிபொருள் நிரப்பு உரிமையாளர் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமான வருமானம் பெறும் போது அவர் வருடத்திற்கு 75 ஆயிரம் வரி செலுத்துகிறார்.இது எந்தளவிற்கு நியாயமானது.225 உறுப்பினர்களை மாத்திரம் விமர்சிப்பது முறையற்றதாகும்.பாராளுமன்ற உறுப்பினர்களின் வரபிரசாதங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.

ஜனநாயத்திற்காக வீதிக்கிறங்கிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் எத்தனை பேர் வருடாந்த வரி செலுத்துகிறார்கள்.தனியார் வகுப்பு ஆசிரியர்களில் ஒருசிலர் ஒரு நாளைக்கு இலட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுகிறார்கள்.இவர்களில் எத்தனை பேர் வருடாந்த வரி செலுத்துகிறார்கள்.அனைவரும் முறையாக வரி செலுத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தேவையில்லை.சுங்க திணைக்களத்தில் முறையற்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.சுங்க திணைக்களம் முறையாக முகாமைத்துவம் செய்யப்பட்டால் அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ளலாம்.

மக்கள் வங்கியில் 15 பிரதி பொது முகாமையாளர்கள் உள்ளனர்.இவர்களுக்கு 160 இலட்ச ரூபா கணக்கில் அதி சொகுசு மோட்டார் கார் வழங்கப்பட்டுள்ளது.மத்தியவங்கி,திறைச்சேரி,ஆகியவற்றில் உள்ளவர்களின் மாத சம்பளத்தை குறிப்பிட்டால் அவர்களுக்கு வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலை ஏற்படும் அதனால் கூறவில்லை.20 இலட்சம் முதல் 40 இலட்சம் வரை ஒவ்வொரு நிறுவனங்களும் வௌ;வேறாக செலுத்துகின்றன. அரச வருமானத்தை முறையாக முகாமைத்துவம் செய்ய 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.