மீண்டும் களமிறங்கிய மகிந்த – தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

சமகாலத்தில் தென்னிலங்கை அரசியலில் நிலையான தலைமைத்துவம் இன்மையால் சிறிய கட்சிகள் சிதறுண்ட நிலையில் காணப்படுகின்றன. கடந்த பொதுத்தேர்தலில் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து போட்டியிட்ட பல சிறிய கட்சிகள் தற்போது பிரிந்து சென்று சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மையின் பலம் குறைந்து வருவதுடன், கட்சி நலிவடைந்து செல்லும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

கட்சிக்குள் பிளவு

இந்நிலையில் மக்களால் விரட்டப்பட்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மீண்டும், முழுநேர அரசியல் நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார்.அதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று விதிகளை மீறிய காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மகிந்த

ஜீ.எல்.பீரிஸை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்ததையடுத்து, தலைவர் பதவியுடன் தொடர்பான எந்தப் பணிகளையும் வழங்குவதனை தவிர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜீ.எல்.பீரிஸை அந்த பதவியில் இருந்து நீக்கிய பின்னர் அந்த தலைவர் பதவிக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தெரிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

விரைவில் பொதுத் தேர்தல்

மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழ் செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பேச்சாளர், அதன் கீழ் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பல நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையால், அதனை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை மறுசீரமைத்து வருவதுடன், தென்னிலங்கை மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!