ரணிலுக்கு மூன்று வாரங்களில் ஜனாதிபதியாக முடியும் என்றால் ஏன் எமக்கு முடியாது-மைத்திரி

பூஜ்ஜியம் என்ற நிலைமைக்கு சென்ற ரணில் விக்ரமசிங்கவினால், ஜனாதிபதியாக பதவிக்கு வர முடியும் என்றால், ஏன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மீண்டும் எழுந்து நிற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

மகரகமை இளைஞர் சேவைகள் மன்றத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 71 வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணிலுக்கு முடியும் என்றால் ஏன் சுதந்திரக்கட்சிக்கு முடியாது?

ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக வந்து, பிரதமராக தெரிவாகி, மூன்று வாரங்களில் ஜனாதிபதியாக தெரிவாக ரணில் விக்ரமசிங்கவுக்கு முடிந்துள்ளது என்றால், ஏன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியாது?.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் மீண்டும் எழுந்து நிற்க முடியும். நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய விரைவில் ஏதாவது ஒரு தேர்தல் நடத்தப்படும் அடையாளங்கள் தென்படுகின்றன.
அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு சுதந்திரக்கட்சிக்கு

அடுத்த அரசாங்கத்தை அமைக்கக்கூடிய அதிகமான வாய்ப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான கூட்டணிக்கே இருக்கின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டுக்காக இணைந்து வேலை செய்ய தயாரில்லை என்ற காரணத்தினால், அந்த கட்சியில் அங்கம் வகித்த 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவும் சுயாதீனமாக செயற்படவும் நேரிட்டுள்ளது எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!