கோட்டாபயவுக்கு ஆபத்து – பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு கோரிக்கை

இலங்கை வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் வசதிகளை விடவும் அதிக பாதுப்பு வழங்குமாறு பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அச்சத்தில் கோட்டாபய

கோட்டாபய ராஜபக்ச யுத்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றியமையால் புலம்பெயர் அமைப்புகளினால் அவரது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளை விட அதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அல்லது பாதுகாப்பு தொடர்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. புலம்பெயர்ந்தோரின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்படும் பாதுகாப்பு

நாங்கள் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கச் சென்றோம், ஆனால் அரசியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை. எதிர்கால அரசியல் முடிவுகள் குறித்து எங்களிடம் எதுவும் கூறவில்லை.
கடந்த ஒன்றரை மாத கால அனுபவங்களை மட்டும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் எதிர்கால அரசியல் தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே செயலாளர் மேலும் தெரிவித்தார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!