இரண்டு ஆண்டுகளில் நான்காவது பிரதமரைக் காண விரும்பவில்லை!

இரண்டு வருட பாராளுமன்ற பயணத்தில் மூன்று பிரதமர்களை கண்டுள்ளேன், இடைப்பட்ட காலத்தில் நான்காவது பிரதமர் ஒருவரை காண விரும்பில்லை என சுயாதீனமாக செயற்படும் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
   
வறுமை கோட்டில் உள்ள 61 ஆயிரம் குடும்பம் அல்ல,61 இலட்ச மக்களுக்கு அடிப்படை நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.வறுமை கோட்டில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பொறுப்பான அதிகாரிகள் ஜனாதிபதியை தவறாக வழிநடத்தியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்ற அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 13 பேருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் வலியுறுத்தியதை தொடர்ந்து மந்த போசணை தொடர்பான விவாதத்தில் உரையாற்ற சுயாதீன தரப்பினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பேச்சுரிமையினை முடக்கி வெற்றி பெற முடியும் என கருதுவது தோல்வியின் ஆரம்பமாக அமையும்.பிள்ளைகள் மற்றும் தாய்மார்கள் எதிர்கொண்டுள்ள மந்த போசணை தொடர்பில் யுனிசெப் அறிக்கை விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.சுதந்திரத்தின் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில் பிள்ளைகள் மந்த போசணையால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் பல்வேறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படும் பிள்ளைகள் மந்த போசணை பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.பிறக்கும் சிசுக்களின் நிறை குறைந்த மட்டத்தில்காணப்படுகின்றன. இப்பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணாவிடின் நாட்டின் எதிர்காலம் மந்த போசணையாக அமையும்.

மூன்று வேளை உணவு உண்ணும் விவசாய குடும்பங்களின் வீதம் குறைவடைந்துள்ளது.போசனையுடன் ஒருவேளை உணவை உட்கொள்ளும் குடும்பங்களின் வீதம் குறைவடைந்துள்ளன.பாடசாலை மாணவர்களின் போசணையும் பாதிக்கப்பட்டுள்ளன.ஆகவே இப்பிரச்சினை குறித்து கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கிராம புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசனையான உணவை வழங்க அவதானம் செலுத்த வேண்டும்.உணவு பாதுகாப்பில்லாத 61 ஆயிரம் குடும்பங்களுக்கு 10000ஆயிரம் கொடுப்பனவு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.இவ்விடயத்தில் ஜனாதிபதிக்கு தவறான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

61ஆயிரம் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானது.இவ்விடயத்தில் பொறுப்பான அதிகாரிகள் ஜனாதிபதியையும்,ஜனாதிபதி செயலகத்தையும் தவறாக வழிநடத்தியுள்ளார்கள்.61 ஆயிரம் குடும்பம் அல்ல 61 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்க வேண்டிய நெருக்கடி நிலை காணப்படுகிறது.

உணவு பாதுகாப்பு தொடர்பில் உரிய அவதானம் செலுத்த வேண்டும்.கிராமிய புறங்களில் லீசிங் முறைமையினால் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளார்கள்.தனியார் துறையில் எவருக்கும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.பாடசாலை செல்லும் மாணவர்கள் உள்ள குடும்பத்திற்கு லீசிங் செலுத்தலில் காலவகாசம் வழங்கப்பட வேண்டும்.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறது.பொதுஜன பெரமுன கட்சியின் அடிப்படை கொள்கைக்கு முரணாக செயற்படுகிறது.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இருப்பினும் மறுசீரமைப்பு என்ற பெயரில் தனியார் மயப்படுத்த இடமளிக்க முடியாது.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தினால் சமூக கட்டமைப்பில் பேரழிவு ஏற்படும்.பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதால் எமது பேச்சுரிமையை முடக்குவது திருத்த முடியாத தவறாகும்.கடந்த 30 வருட காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் ஆளும் மற்றும் எதிர்தரப்பில் அங்கம் வகித்துள்ளார்கள் என பிரதமர் குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பாராளுமன்றத்திற்கு முன்வைக்க முன்னர் புதிய பிரதமரை தெரிவு செய்ய ஆளும் தரப்பினர் எமது ஒத்துழைப்பை கோருகிறார்கள்.இரண்டு வருட பாராளுமன்ற பயணத்தில் மூன்று பிரதமர்களை கண்டுள்ளேன்,இடைப்பட்ட காலத்தில் நான்காவது பிரதமர் ஒருவரை காண விரும்பில்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!