மேலும் ஒரு மாணவியின் உயிரை பறித்த ‘நீட்’!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நீட் தேர்வால் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தேர்வு முடிவு நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது. தேர்வு முடிவு வெளியான சில மணி நேரத்திலேயே நீட் தேர்வில் தோல்வி அடைந்த திருமுல்லைவாயலை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையின் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    
அதன் விவரம் வருமாறு:- ஆசிரியையின் மகள் சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் சோழபுரம் இந்திரா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் அமுதா (வயது 47). இவர், ஆவடியை அடுத்த பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது ஒரே மகள் லக்சனா சுவேதா (19) உடன் வசித்து வந்தார். லக்சனா சுவேதா அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்தார். அவர் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டார். இதற்காக கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, அதில் தோல்வி அடைந்தார்.

இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவம் தொடர்பான படிப்பை ஆன்லைனில் 1½ ஆண்டுகள் படித்து வந்தார். 2-வது முறையாக எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த லக்சனா சுவேதா, 2-வது முறையாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். தேர்வுக்கு பிறகு அவர் தனது தாயாரிடம் “நான் தேர்வை சரியாக எழுதவில்லை. மதிப்பெண்கள் குறைவாகத்தான் வரும் போல் இருக்கிறது” என்று கூறினார்.
அதற்கு அமுதா, “சரியாக எழுதவில்லை என்றாலும் பரவாயில்லை. அடுத்து எழுதிக்கொள்ளலாம்” என்று மகளுக்கு ஆறுதல் கூறினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நீட் தேர்வு முடிவு வெளியானது. மாலையில் இருந்தே நீட் தேர்வு முடிவு எப்படி இருக்குமோ? என பரிதவித்து வந்த லக்சனா சுவேதா, தனது தாயாருடன் நீட் தேர்வு முடிவுக்காக வீட்டில் காத்திருந்தார். இரவு 11.30 மணியளவில் அமுதா தூங்க சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் நீட் தேர்வு முடிவு வெளியானது. அதில் லக்சனா சுவேதா மீண்டும் தோல்வி அடைந்துவிட்டார். 2-வது முறையும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தன்னால் டாக்டருக்கு படிக்க முடியாதே என விரக்தி அடைந்த லக்சனா ஸ்வேதா, திடீரென வீட்டின் ஹாலில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் எழுந்த அமுதா, தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகளின் உடலை பார்த்து அமுதா கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வு காரணமாக அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது நீட் தேர்வில் 2-வது முறையும் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு மாணவியின் உடல் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது. லக்சனா சுவேதாவின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மாலையில் மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!