பிள்ளையான், லொஹான், சனத்துக்கு அமைச்சர் பதவி!- மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிர்ச்சி.

மிகமோசமான உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), லொஹான் ரத்வத்த மற்றும் சனத் நிஷாந்த ஆகியோருக்கு அதிர்ச்சியளிக்கத்தக்கவகையில் வழங்கப்பட்டிருக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் அமைதிப் போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் கையாளும் மிகக்கடினமான அணுகுமுறையும் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்ந்து மோசமடைந்து செல்வதை ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளுக்கு உணர்த்தியிருக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
  
இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ரணில் விக்ரமசிங்க வியாழக்கிழமை புதிதாக 37 இராஜாங்க அமைச்சர்களை நியமித்துள்ளார்.
அவர்களில் மூவர் மிகமோசமான உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருக்கின்றனர்.
அதன்படி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னர் உறுப்பினரான பிள்ளையான் என்று அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சிறுவர் கடத்தல் உள்ளிட்ட மேலும் பல மீறல்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றார்.

இருப்பினும் கடந்த 2005 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரொருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிள்ளையானுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் கடந்த 2021 ஜனவரியில் சட்டமா அதிபரால் நீக்கப்பட்டன. தற்போது அவர் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்ததாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சிறைக்கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவத்தையடுத்து சிறைச்சாலைகள் அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த லொஹான் ரத்வத்த இப்போது பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்றாவதாக நீர்ப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சனத் நிஷாந்த, அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களில் தொடர்புபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் புதிய தீர்மானமொன்று கொண்டுவரப்படவிருக்கின்றது.

அந்தவகையில் இவ்வாரம் அதிர்ச்சியளிக்கத்தக்கவகையில் இடம்பெற்றிருக்கும் புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமனமும் அமைதிப்போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் கையாளும் மிகக்கடினமான அணுகுமுறையும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்து மோசமடைந்து செல்வதை ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புநாடுகளுக்கு உணர்த்தியிருக்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!