சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை மீற வேண்டாம்! எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்து

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என்று சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை மீறி இலங்கை அரசு செயற்படுகின்றது. அந்த வாக்குறுதியை மீற வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதில் சர்வஜன நீதி அமைப்பின் சார்பில் கலந்துகொண்டு சுமந்திரன் எம்.பி. உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் வரைக்கும் அதற்கு எதிரான எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

“இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவோம் என்று சர்வதேசத்துக்கு இலங்கை அரசு வாக்குறுதி அளித்திருக்கின்றது. ஆனால் இன்று வரை அது நீக்கப்படவில்லை.
இந்த வருட ஆரம்பத்திலே இந்த சட்டம் நீக்கப்படுகின்ற வரை இதனை உபயோகிக்கமாட்டோம் என்ற வாக்குறுதி ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கும், பல்வேறு சர்வதேச அமைப்புக்களுக்கும் இலங்கை நாடாளுமன்றத்திலேயும் ஒரு உறுதிமொழி கூறப்பட்டிருக்கின்றது.

ஆனால், பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்போதும் உபயோகிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் 3 மாதங்களாகக் காலிமுகத்திடலில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தவர்களுக்கு எதிராக இந்த சட்டம் பிரயோகிக்கப்பட்டியிருந்தது.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளவும் உபயோகிப்பதற்கு இந்த அரசு ஆரம்பித்திருக்கின்ற இந்த வேளையில் நாங்கள் இந்தப் போராட்டத்தைத் திரும்பவும் புத்துணர்ச்சி கொடுத்து ஆரம்பித்திருக்கின்றோம். அதாவது இந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பித்திருந்த இந்த கையெழுத்து போராட்டத்தை மீளவும் ஆரம்பித்திருக்கின்றோம்.

தற்போது இந்த போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களுடைய ஒன்றியங்களும், பொதுஜன அமைப்புக்களும் இணைந்துள்ளன. இந்த போராட்ட ஊர்தியை 25 மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்போகின்றோம்.வடக்கு, கிழக்குக்கு அப்பால் நாம் செல்கின்றபோது விசேடமாக மாணவர் ஒன்றியமும் ,தொழிற்சங்கங்களுடைய பிரதிநிதிகளும் அந்தந்த மாவட்டங்களிலே எங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

யாழ்ப்பாணத்திலே இந்த ஊர்தியானது 3 நாட்கள் பயணிக்கும். இங்கே கூடுதல் அளவிலான கையெழுத்துக்கள் திரட்டப்பட வேண்டும். அதற்குப் பின்னர் ஒவ்வொரு மாவட்டங்களாக செல்வோம்.இறுதியில் அம்பாந்தோட்டையில் இந்த போராட்டம் நிறைவு பெறும். இதற்கு அனைவரும் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!