ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டத்தில் தனித்தனியாக போட்டியிட அனுமதி கோரிய தினேஸ்!

நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காது வன்முறைகளற்ற சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து உறுப்பினர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

ஐ. ம.சு முன்னணியின் தூய்மையானதும் முறையானதுமான அரசியல் பயணத்திலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வெற்றி தீர்மானிக்கப்படும் என்றும் அதற்காக வேட்பாளர்களை நியமிக்க வேண்டியது முக்கியமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுச் சபை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம்வசிக்கும் அரசியல் கட்சிகளுக்கு தனித்தனியாக இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் நிற்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஆலோசனையொன்றை முன்வைத்தார். அதேபோன்று வன்முறையற்ற சுதந்திரமும் அமைதியுமான தேர்தலுக்காக அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர இங்கு கருத்துத் தெரிவிக்கையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒரே கூட்டமைப்பாக செயற்படுவது அவசியமென தெரிவித்ததார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஆறுமுகம் தொண்டமான் எம்.பி. மற்றும் தேசிய காங்கிரஸின் சார்பில் ஏ. எல். எம். அதாவுல்லா உள்ளிட்ட பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கூட்டாக தேர்தலில் நிற்பதற்கு இணக்கம் தெரிவித்தனர். இவர்களின் கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வன்முறைகளற்ற சுதந்திரமும் அமைதியுமான தேர்தலுக்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: , ,