தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளை கேவலப்படுத்திய சிறை அதிகாரிகள்!

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடச் சென்ற அவர்களது உறவினர்களான பெண்களை மிகவும் மோசமாக சோதனை செய்து அவர்களை அசிங்கப்படுத்தியதுடன், இனவாதமாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.வவுனியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கைதிகள் தினத்தை முன்னிட்டு தங்களது உறவுகளை சிறைச்சாலைகளில் பார்வையிடச் சென்ற சொந்தங்கள் மிக மோசமான முறையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளார்கள். பெண்கள் மிகவும் வன்மையபான முறையில் சோதிக்கப்பட்டுள்ளார்கள்.அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்கள். சிறைச்சாலையில் உள்ள தேவதாசன் என்பரை பார்க்கச் சென்ற அவரது மகளை மிக மோசமாக பரிசோதனை செய்த நிலையில் அந்த சகோதரி அதற்கு எதிர்ப்பை காட்டிய போது அவர்கள் சிங்களத்தில் இது எங்களது சிங்கள நாடு எனக் கூறியுள்ளார்கள். மிகவும் இனவாதத்தோடு மோசமாக சிறை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளார்கள்.

சிறைச்சாலை தினம் என்பது எல்லோரும் வந்து பார்வையிடும் ஒரு தினம். நவீன முறையில் பல சிறைச்சாலைகளில் பரிசோதனை முறைகள் உள்ளன. அதைவிடுத்து இனதுவசத்தோடு மிகவும் மோசமாக நடந்து கொண்டதை வன்மையாக கண்டிக்கின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தவுள்ளோம்.இவ்வாறான நிலையில் இந்த நாட்டில் தமிழ் மக்களுடைய தீர்வினையும், அவர்களது உணர்வுகளையும், சரி செய்வது என்பது கேள்விக் குறிசியாகவே உள்ளது. ஜனாதிபதி தனது உரையில் தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்க்கப்பட வேணட்டும் எனக் கூறுகின்றார். ஆனால் அதற்கு நேருக்கு மாறாக பல விடயங்கள் நடந்து வருகின்றது.

நிலங்கள் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு வருகின்றது. அரசியல் கைதிகள் விடுதலை கேள்விக்குறியாகவுள்ளது.அவர்கள் தற்போது உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களுக்கு எமது ஆதரவு உண்டு. அவர்களது விடுதலைக்காக நாங்கள் முயற்சிப்போம். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்றாவிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காது.

சிறைகைதிகளின் விடுதலை நடைபெறவில்லை. பார்வையிடச் செல்பவர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிலங்களை அபகரிக்கும் நிலை தொடர்கிறது. பத்திரிகையாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தேசத்திற்காக குரல் கொடுத்தவர்கள் என பலரை ரிஐடி அழைத்து விசாரணை செய்கிறது. வடக்கு, கிழக்கில் 15 பேருக்கு மேல் அழைக்கப்பட்டுள்ளார்கள்.பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் உரையாற்றியுள்ளோம். எதற்காக இந்த விசாரணை. இது தேவையற்றது.

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் அதனை நிவர்த்தி செய்ய புலம்பெயர் உறவுகளை முதலீடு செய்ய அழைக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு வரும் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் நொண்டி சாட்டுக்களை சொல்லி அதனை பறிக்கப் பார்க்கிறார்கள். இதனை தமிழ் தரப்பு தொடர்ந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.தமிழ் மக்களை நசுக்கிக் கொண்டிருந்தால் இந்த நாடு பொருளாதாரத்தில் நெருக்கடியில் இருந்து மீள முடியாது. எனவே எமது மக்களது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!