‘லம்பி ஸ்கின்’ நோயை தடுக்க உள்நாட்டிலேயே சொந்தமாக தடுப்பூசி கண்டுபிடிப்பு!

சர்வதேச பால் பண்ணை கூட்டமைப்பின் உலக பால்வள உச்சி மாநாட்டை உத்தர பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் பிரதமர் மோடி தலைமையேற்று தொடங்கி வைத்தார். முதல்வர் ஆதித்ய நாத், பால் பண்ணை தொழில் முனைவோர், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கால்நடைகளை பாதிக்கும் தோல் கழலை (லம்பி ஸ்கின்) நோய்க்கு ஒரு மாதத்தில் மட்டும் 5,000 மேற்பட்ட விலங்குகள் பலியாகியுள்ளன. கால்நடைகளின் உயிரிழப்புகளைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது.நமது விஞ்ஞானிகளும் அயராது பாடுபட்டு விலங்குகளுக்கு ஏற்படும் தோல் கழலை நோய்க்கு உள்ளூர் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.

2025-ம் ஆண்டுக்குள்: கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வரும் 2025-ம் ஆண்டுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம்.

கால்நடைகளுக்கு பாக்டீரியா தொற்றால் உண்டாகும் புரூசெ லோசிஸ், பாதம், வாய் பகுதி களை தாக்கும் நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் வகையில் 100 சதவீதம் தடுப் பூசியை போட வேண்டும். இந்த தசாப்தத்துக்குள் கால்நடைகளை இந்த வகை நோய்த் தாக்குதல்களில் இருந்து மீட்பதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்.

பசு ஆதார் திட்டம்: உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா மிக முக்கிய பங்களிப்பை வழங்குவதற்கு இங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கும் கால் நடைகளே முக்கிய காரணம். அதுகுறித்த ஒழுங்கமைவான தகவல் தொகுப்பை உருவாக்குவ தற்காகவே பசு ஆதார் திட்டம் உருவாக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் விலங்குகளின் பயோமெட்ரிக் அடையாளங்களை சேகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்திய பால் பண்ணைத் துறையில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கு ஊக்கமளித்து வருவதால் அது உலகெங்கிலும் உள்ள விவசாயிகளுக்கு பயனுள்ளதாக மாறியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பால் உற்பத்தி 44 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 2014-ல் 14.6 கோடி டன்னாக இருந்த பால் உற்பத்தி தற்போது 21 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை இந்தியா பால் பண்ணைத்துறையின் திறனை மேம்படுத்துவதற்கு இடைவிடாது பணியாற்றி வருகிறது.மத்திய அரசின் இந்த தீவிர முயற்சிகளால் உலக பால் உற்பத்தியில் இந்திய பால் பண்ணைத் துறையின் பங்கு 23 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், 8 கோடிக்கும் அதிகமான பால் பண்ணை விவசாயிகள் இதனால் பலனடைந்துள்ளனர்.

70 சதவீதம் பேர் பெண்கள்: இந்தியாவில் பால் பண்ணைத் துறைக்கு மற்றொரு மாபெரும் சிறப்பு, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் 70 சதவீதம் பேர் பெண்கள். அவர்களே இந்திய பால் பண்ணைத் தொழிலின் உண்மையான எஜமான்களாக விளங்குகின்றனர். பால் பண்ணைத் தொழிலில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் பணத்தில் 70 சதவீதம் விவசாயிகளின் பாக்கெட்டுகளை நேரடியாக சென்றடைகிறது. மற்றஎந்த நாடுகளிலும் இந்த அளவிலான வருமானத்தை விவசாயிகள் பெறுவதில்லை.

பன்முகத்தன்மை தேவை: இந்தியாவின் பால் கூட்டுறவு சங்கங்கள் மிக நீண்ட கிளைகளை உடையது. இதனால்தான் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2 கோடி விவசாயிகள் ஒரு நாளில் 2 முறை பாலை சேகரித்து நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஒருமுகத் தன்மை தீர்வைத் தராது. பன்முகத் தன்மையே மிகவும் அவசியமாகும். அதனால்தான் இந்தியா இன்று கலப்பின இனம் (ஹைபிரிட் ப்ரீட்) மற்றும் சொந்த தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!