இறக்குமதி செய்யப்படும் அரிசி மனிதர்களை விட விலங்குகளுக்கு ஏற்றது: மகிந்த அமரவீர

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் அரிசி மனிதர்கள் நுகர்வதற்கு எந்தவகையிலும் பொருத்தம் இல்லை. மிருகங்களுக்கே அது பொருத்தமாகும். அதனால் மேலதிக அரிசியை மிருக உணவுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமான வர்த்தமானி அறிவிப்போன்றை வெளியிடுமாறு நுகர்வோர் அதிகாரசபையிடம் பிரேரணை ஒன்றை முன்வைக்க இருக்கின்றேன் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசி வகைகளை மிருக உணவுக்கு எடுத்துக்கொள்ள முடியாது என சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. என்னை பொறுத்தவரையில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் அரிசி மிருகங்களுக்கு அல்லாமல் மனிதர்கள் நுகர்வதற்கு தரமானது அல்ல.
அந்த அரிசி வகைகளில் நாங்கள் பயன்படுத்தாத இரசாயன வகைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தரம் குறைந்த உரம் சில அரிசி வகைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

அதனால் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் அரிசி மனிதர்களைவிட மிருகங்களுக்கே பொருத்தம். தற்போது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் மேலதிக அரிசியை மிருக உணவுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமான வர்த்தமானி அறிவிப்போன்றை வெளியிடுமாறு நுகர்வோர் அதிகாரசபையிடம் பிரேரணை ஒன்றை முன்வைக்க இருக்கின்றேன்.
மேலும் சோளம் இறக்குமதி செய்ய தற்போது அனுமதிப்பத்திரம் விநியோகித்து இருக்கின்றோம். இதன் மூலம் உடனடியாக விலை குறைப்புகளை மேற்கொள்ள முடியும். அத்துடன் வங்கி கணக்குகளுக்கு பணம் கிடைத்த பின்னரே ஏனைய பிரதேசங்களில் நெல் கொள்வனவு செய்ய முடியும்.

இரண்டாயிரம் மில்லியன் ரூபா பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி ஒன்றை பெற்றுக்கொண்டிருக்கின்றேன். என்றாலும் பணம் வழங்குவதில் வங்கிகளில் மந்த நிலையே இருந்து வருகின்றது. அதனால் பணம் கிடைத்தால் மாத்திரமே நெல் கொள்வனவு செய்ய முடியும்.
அத்துடன் நெல் களஞ்சியசாலைகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை கோரி இருக்கின்றேன். இதுதொடர்பாக நெல் கொள்வனவு சபை அதிகாரிகளின் நடவடிக்கையில் எனக்கு திருப்தியில்லை. இதுதொடர்பாக ஒரு அதிகாரியை இடைநிறுத்தி இருக்கின்றோம். நெல் கொள்வனவு சபையில் பூரண மாற்றத்தை ஏற்படுத்த இருக்கின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!