எனக்கு கிடைத்த வாழ்த்துச் செய்திகளில் மகாராணியின் வாழ்த்து முக்கியமானது-ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார். இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறப்பு தொடர்பான இரங்கல் யோசனையை முன்வைப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடியதுடன் மதியம் 12.30 வரை இரண்டாவது எலிசபெத் மகாராணி இறப்பு தொடர்பான இரங்கல் உரைகள் இடம்பெறவுள்ளன.
வாழ்த்துச் செய்தி மகாராணியின் கடிதங்களில் இறுதியானது

இரங்கல் யோசனையை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, நான் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் கிடைத்த வாழ்த்துச் செய்திகளில் இரண்டாவது எலிசபெத் மகாராணியிடம் இருந்து கிடைத்த வாழ்த்து மிக முக்கியமானது.அவரது இந்த வாழ்த்துச் செய்தி, மகாராணியின் கடிதங்களில் இறுதியாக மாறியது. மகாராணி இறப்பு இந்தளவு விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை.

மகாராணி இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் புதிய பிரதமருடன் அவரை தொலைக்காட்சியில் காணமுடிந்தது. அவர் சிறிது சோர்வாக இருப்பதை அதில் காண முடிந்தது.
எவ்வாறாயினும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் தற்போதைய பிரதமர் லிட்ஸ் ட்ரஸ் ஆகியோருடன் ஒரு நாளில் அரைநாளை செலவிடும் எவரும் சோர்வடைவார்கள். இதனால், மகாராணி சோர்வடைந்தது ஆச்சரியத்திற்குரியது அல்ல.

எலிசபெத் மகாராணி இலங்கை, பொதுநலவாய நாடுகள், பிரித்தானியா மற்றும் உலகில் எதிர்பார்த்த விடயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மகாராணியின் ஆட்சிக்காலத்தில் நாடு சிலோன் என்ற நிலையில் இருந்து இலங்கை (ஸ்ரீலங்கா) என்ற நிலை வரை பரிணாமம் பெற்றது.

1956 தேர்தல் வெற்றி, இனப்பிரச்சினை, இலவச கல்வி, பொருளாதாரத்தை அரசுடமையாக்கியமை ஆகிய இலங்கையில் நடந்த பிரதான அரசியல் சம்பவங்கள் மகாராணியின் ஆட்சியின் கீழ் ஆரம்பமானது.

எலிசபெத் மகாராணி ஒரு கிறிஸ்தவர் என்ற போதிலும் 1815 ஆம் ஆண்டு கண்டி உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கையின் பௌத்த மதத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!