நெப்டியூனைப் படம் பிடித்தது: ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி வெளியிட்டது நாசா

சூரிய குடும்பத்தின் 8-வது கிரகம், நெப்டியூன். பூமியைக் காட்டிலும் சூரியனில் இருந்து 30 மடங்கு தொலைவில் அமைந்துள்ளது, நெப்டியூன். இந்த நெப்டியூனையும், அதன் மெல்லிய வளையங்களின் விரிவான படத்தையும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி முதல் முறையாக படம் பிடித்துள்ளது. இந்தப் படத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கி, ஒளிர்கிற நெப்டியூன் மற்றும் அதன் நுட்பமான, தூசுகள் நிறைந்த வளையங்களை படம் பிடித்துள்ளது என நாசா தெரிவித்துள்ளது.

இதுபற்றி நெப்டியூன் சிஸ்டம் நிபுணரும், வெப் இடைநிலை விஞ்ஞானியுமான ஹெய்டி ஹேமல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், “இந்த மங்கலான தூசுகள் நிறைந்த வளையங்களை நாங்கள் கடைசியாகப் பார்த்து 30 ஆண்டுகள் ஆகி விட்டன. அகச்சிவப்பு நிறத்தில் அவற்றைப் பார்ப்பது இதுவே முதல் முறை ஆகும்” என தெரிவித்துள்ளார்.

1989-ம் ஆண்டு ‘வாயேஜர்- 2’ விண்கலம் நெப்டியூன் கிரகத்தை கடந்து சென்றதில் இருந்து, விரிவாகக் காணப்படாத அம்சங்களை இந்த தொலைநோக்கியின் அகச்சிவப்பு கருவிகள் விரிவாக எடுத்துக்காட்டி இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நெப்டியூனின் 14 நிலவுகளில் 7 நிலவுகளையும், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!