19 வயதில் ரூ.1,000 கோடி சொத்து சேர்த்த இளம் தொழில் அதிபர்கள்

ஐ.ஐ.எப்.எல். வெல்த் மற்றும் ஹாரூன் நிறுவனம் ஆகியவை 2022-ம் ஆண்டுக்கான இந்தியாவில் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு பரவலாக பயன்படுத்தப்படும் செப்டோ செல்போன் செயலியின் நிறுவனர்களான கைவல்யா வோரா மற்றும் ஆதித் பலிச்சா ஆகிய இளம் தொழில் முனைவோர்கள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளனர். கைவல்யா தனது 19 வயதிலேயே ரூ.1,000 கோடி நிகர சொத்து மதிப்புடன் பட்டியலில் 1,036-வது இடத்தில் உள்ளார். செப்டோவின் மற்றொரு இளம் நிறுவனரான ஆதித் பலிச்சா ரூ.1,200 கோடி நிகர சொத்து மதிப்புடன் 950-வது இடத்தை பிடித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கைவல்யா வோரா, ஆதித் பலிச்சா ஆகிய இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள் ஆவார். புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே தொழில் முனைவோராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் இந்தியா திரும்பினர். கடந்த 2020-ம் ஆண்டு செப்டோ நிறுவனத்தை தொடங்கினர். இந்நிலையில் கொரோனா சமயத்தில் மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் சிரமப்படுவதை கண்ட இருவரும் செப்டோ நிறுவனத்தின் மூலமாக மளிகை பொருட்களை ஆன்லைன் டெலிவரி செய்ய நினைத்து செய்த நடவடிக்கைகள் நிறுவனத்தை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது.

கைவல்யா வோராவின் பங்குதாரர் ஆதித் பலிச்சாவுக்கு தற்போது 20 வயதாகிறது. இவரது சொத்து மதிப்பு ரூ.1,200 கோடி ஆகும். பலிச்சா, தன்னுடைய 17 வயது முதல் ஸ்டார்ட் அப் கனவில் இருந்ததாக பல முறை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து தொடங்கிய இந்நிறுவனம் 2 வருடங்களில் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருப்பது ஸ்டார்ட் அப் உலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!