நான் தலையீடு செய்யவில்லை! – குற்றச்சாட்டுகளை சுமந்திரன் நிராகரிப்பு

நிபுணர்கள் குழுவைப் பயன்படுத்தி இரகசியமான முறையில் அரசியமைப்பு வரைபைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையற்றது என்று வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட கலந்துரையாடல் அறிக்கையை தயாரிப்பதில் தானோ அல்லது ஜயம்பதி விக்ரமரட்ன எம்.பியோ எந்தவித தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லையென அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று சபாநாயகரின் அனுமதியுடன் நிகழ்த்திய தனிநபர் விளக்க உரையின்போதே சுமந்திரன் எம்.பி இதனைக் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் ஒரு சிலரினால் தயாரிக்கப்பட்ட வரைபை திணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் ஜயம்பதி விக்ரமரட்ன மற்றும் நிபுணர் குழு உறுப்பினரான சுரேன் பெர்னான்டோ ஆகியோர் இந்த வரைபைத் தயாரித்திருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே சுமந்திரன் எம்பி நேற்று விளக்கமளித்தார்.

அரசியலமைப்பு தொடர்பான வரைபை தயாரிக்கும் பொறுப்பு வழிநடத்தல் குழுவுக்கே உள்ளது. நிபுணர்கள் குழுவினால் அரசியலமைப்புக்கான வரைபை தயாரிக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவும் இல்லை. எனினும், நிபுணர்கள் குழுவால் இரகசியமான முறையில் அரசியலமைப்பு வரைபு தயாரிக்கப்பட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் போலியானவை. மக்களை பிழையாக வழிநடத்தும் நோக்கில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக அவர் கூறினார்.

அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில், அரசியலமைப்பு வரைபுக்கான கலந்துரையாடல் அறிக்கையொன்றை தயாரிப்பதற்கு பத்துப் பேரைக் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது. இந்த நிபுணர்கள் குழு கடந்த புதன்கிழமை வழிநடத்தல் குழுவில் இரண்டு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது. இந்த நிபுணர்கள் குழுவில் 6 பேர் கொண்ட குழு ஒரு அறிக்கையையும், மேலும் இரு நிபுணர்கள் மற்றுமொரு அறிக்கையையும் முன்வைத்தனர். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் எந்தவொரு உறுப்பினரும் கையெழுத்திடவில்லை. எனினும், நிபுணர்கள் குழு உறுப்பினர் ஒருவர் சார்பில் போலி கையொப்பம் இடப்பட்டதாக சபையை சிலர் பிழையாக வழிநடத்தியுள்ளனர்.

இரு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டதால் சகலரும் இணைந்து ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அதற்கு இரண்டு வாரகாலம் அவகாசம் வழங்கவும் வழிநடத்தல் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. நிபுணர்கள் குழுவால் அறிக்கை தயாரிக்கும்போது நானோ அல்லது ஜயம்பதி விக்ரமரட்னவோ எந்தவிதமான தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை.

அதுமாத்திரமன்றி, அரசியலமைப்பு வரைபை தயாரிக்கும் பொறுப்பு வழிநடத்தல் குழுவுக்கே உள்ளது. நிபுணர்கள் குழு அதற்கான கலந்துரையாடல் அறிக்கையையே தயாரிக்கும். வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்டு வரைபு அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான நிலையில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நிபுணர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளால் பாராளுமன்றத்துக்கு உதவ நிபுணர்கள் எவரும் முன்வரமாட்டார்கள் என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!