இலங்கையில் பலரின் கவனத்தை ஈர்த்த இளைஞரின் நெகிழ்ச்சியான செயல்

அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரொருவர் உயிர் பிரியும் தருணத்தில் மூவருக்கு செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் தன் உயிரை இழந்தாலும், அடுத்தவர் வாழ்வில் ஒளியாய் மறையும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கின்றது.அந்த வகையில், குறித்த இளைஞரின் செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அரலகங்வில, கல்தலாவ பகுதியைச் சேர்ந்த ருவன் சந்தன என்ற 31 வயதுடைய திருமணமான இளைஞரொருவர் கடந்த 19ஆம் திகதி இரவு விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயங்களுடன் பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 2 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இளைஞருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தாரிடம் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

மூவரின் வாழ்வை மாற்றிய இளைஞன்
இதனை தொடர்ந்து அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரலை எடுத்து மூன்று நோயாளிகளுக்கு உயிர் கொடுக்க முடியும் எனவும்,உறவினர் விரும்பினால் மாத்திரம் இதனை செய்ய முடியும் எனவும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கிய நிலையில் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களும் ஏனைய விசேட வைத்தியர்களும் இணைந்து இந்த இளைஞரின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பெற்று மூவருக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

இதன்போது விபத்தில் உயிரிழந்த இளைஞர் அடுத்த மாதம் வெளிநாடு செல்ல தயாரான நிலையில், தனக்கு ஏதாவது அனர்த்தம் நேர்ந்தால் தனது கண்களை தானமாக வழங்க வேண்டுமென விபத்திற்கு முதல் நாள் குடும்பத்தாரிடம் தெரிவித்திருந்ததாகவும் உயிரிழந்த இளைஞரின் மனைவி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் உடற்பாகங்களால் மூன்று உயிர்களை வாழ வைத்த குடும்பத்தினரின் நெகிழ்ச்சியான செயலை பலரும் பாராட்டியுள்ளதுடன், உயிரிழந்த இளைஞருக்கு பலரும் தமது இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!