குழப்பங்களுக்கு மத்தியில் எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு

தற்போது டீசல் மற்றும் எரிபொருள் போதுமான அளவு கையிருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில் மேலும், இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் சரக்குகளின் தரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சட்டப்பூர்வமாக பதிலளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் லக்சபான நீர்மின் நிலையத்தின் செயலிழப்பு, டீசல், எரிபொருள் மற்றும் நீர் முகாமைத்துவத்திற்கு போதிய நிதியில்லாதமையினால் இலங்கை மின்சார சபையால் (CEB) நீடிக்கப்பட்ட மின்வெட்டு கோரப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கை அதிகாரிகள் தவறான வகை கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதாகவும் அதில் தவறான வகை நாப்தா திரவம் உள்ளதாகவும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் கஞ்சன விஜயசேகர, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.


தவறான இறக்குமதி 

அதிகாரிகள் தவறான வகை நாப்தாவைக் கொண்ட தவறான வகை கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதாகவும், இந்த கையிருப்பை உற்பத்திக்கு பயன்படுத்த முடியாது என்றும் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார்.
புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயில் உள்ள நாப்தாவில் அதிக அளவு கந்தகம் உள்ளது, அதை மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த முடியாது என்று, இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய கச்சா எண்ணெய் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நீண்ட மின்சார தடையை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எரிசக்தி மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!