இராணுவ அதிகாரக் கோட்டையாக மாறியது கொழும்பு!

அதி உயர் வலய பாதுகாப்பு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கொழும்பு நகரம் இராணுவ அதிகார கோட்டையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளமை பாரதூரமானது. பிரித்தானியரின் ஆட்சி காலத்தில் கூட இவ்வாறான தன்மை காணப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
   
போராட்டங்களில் ஈடுப்பட முன்னர் பொலிஸாரிடம் அனுமதி பெற வேண்டும் என பதில் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானாது. பேச்சு சுதந்திரத்தை வெளிப்படுத்த மக்கள் எவரிடமும் அனுமதி பெற வேண்டிய தேவை கிடையாது எனவும் தெரிவித்தார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் காங்கிரசின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாநாயகவாதி என வேடமிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பினால் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை முடக்கும் வகையில் செயற்படுகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் 1955ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க அரச இரகசிய சட்டக்கோவையின் 2 ஆவது பிரிவின் கீழ் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீதிகள் மற்றும் இடங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து ஆச்சரியமடைந்தேன்.

67 ஆண்டுகால பழமையான அரச இரகசிய சட்டக்கோவையை ஜனாதிபதி சட்டத்திற்கு முரணான வகையில் அமுல்படுத்தியுள்ளார். இச்சட்டத்தினால் கொழும்பு நகரம் இராணுவத்தின் அதிகார கோட்டையாக மாற்றமடைந்துள்ளது.இதனால் அரசியலமைப்பின் 14 ஆவது உறுப்புரைக்கமைய நாட்டு மக்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் கடுமையான முறையில் மீறப்படுகிறது.

போராட்டங்கள்,பேரணியில் ஈடுப்பட 6 மணித்தியாலயத்துக்கு முன்னர் பொலிஸாரின் அனுமதியை பெற வேண்டும் என பதில் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடடடுள்ளளமை முற்றிலும் தவறானது.
சட்டம் தொடர்பில் அவருக்கு தெளிவற்ற தன்மையே காணப்படுகிறது. பொது மக்கள் ஓரிடத்தில் ஒன்றுகூடுவதற்கு பொலிஸாரின் அனுமதியையும்,கரிசனையையும் பெற வேண்டிய தேவை கிடையாது.

பிரித்தானியரின் ஆட்சி காலத்தில் கூட இந்தளவுக்கு கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படவில்லை. நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.கொழும்பு நகரின் உணவு பணவீக்கம் எதிர்வரும் மாதம் நூற்றுக்கு நூறு சதவீதத்தை எட்டும் நிலையே காணப்படுகிறது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு நிச்சயம் வீதிக்கு இறங்குவார்கள். மக்களை அடக்குவதற்காகவே கொழும்பு நகரம் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டு மக்களை முடக்கி எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பதை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!