தோல்வி அடைந்தவர்கள் கட்டிப்பிடித்து நட்பு கொண்டாடுகின்றனர்: – மோடி

பாராளுமன்றத்தில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியில் முடிந்தது. வாக்கெடுப்புக்கு பின்னர் சற்றும் எதிர்பாராத வகையில் பிரதமரின் இருக்கையை நோக்கி சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூர் பகுதியில் ‘கிசான் கல்யான்’ நிகழ்ச்சியில் இன்று விவசாயிகள் இடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முந்தைய அரசுகள் விவசாயிகளுக்கு உதவ முன்வரவில்லை என குற்றம்சாட்டினார். ஆனால், தற்போதைய மத்திய அரசும், உத்தரப்பிரதேசம் மாநில அரசும் விவசாயிகளின் கடுமையான உழைப்புக்கு மரியாதை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:- இதன் காரணமாகவே கரும்பு விவசாயிகளுக்கு பலனளிக்கும் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. வரும் டிசம்பர் முதல் தேதியில் இருந்து கரும்பின் சக்கை மற்றும் சாறில் இருந்து ‘எத்தனால்’ தயாரிக்க அனுமதி அளிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

ஆனால், எதிர்க்கட்சிகள் ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் நன்மையை மறந்துவிட்டு பிரதமர் நாற்காலி ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளன. நேற்று பாராளுமன்றத்தில் நடந்தது உங்களுக்கு திருப்தியாக இருந்ததா? தவறு யாருடையது என்று புரிந்து கொண்டீர்களா? ஏழைகளை பற்றியோ, நாட்டை பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை. அவர்களுக்கு பிரதமர் நாற்காலி மட்டும்தான் முக்கியம்.

நான் ஏதாவது தவறு செய்தேனா?, நான் நாட்டுக்காகவும், ஏழைகளுக்காகவும்தான் உழைக்கிறேன். ஊழலை எதிர்த்து போராடுகிறேன். இதுதான் என் தவறா? எங்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காரணம் என்ன? என்று நாங்கள் கேட்டோம். அதற்கான பதில் யாரும் கூறவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தவர்கள் தேவை இல்லாமல் கட்டிப்பிடித்து நட்பு கொண்டாடுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!