தமிழகத்திலும் ‘பாப்புலர் பிராண்ட்’ சட்டவிரோதமான அமைப்பாக அறிவிப்பு!

சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967-ன் (மத்திய சட்டம்) அடிப்படையில் பி.எப்.ஐ. இயக்கத்தையும் அதன் தொடர்புடைய அல்லது துணை அமைப்புகளான ரீஹேப் இந்தியா பவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, அகில இந்திய இமாம்கள் கவுன்சில், மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு, தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் பிரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேசன், ரீஹேப் பவுண்டேசன் கேரளா ஆகிய அமைப்புகளையும் சட்ட விரோத அமைப்புகளாக மத்திய அரசு 27-ந் தேதி அறிவித்தது.
    
அந்த அறிவிப்பு 28-ந் தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. எழுத்துப்பூர்வ உத்தரவு மேலும் 28-ந் தேதி வெளியிட்ட மத்திய அரசின் அறிவிப்பின்படி, அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும், பி.எப்.ஐ. அமைப்புக்கு எதிராக, சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளை செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் அதே நாளில் மத்திய அரசு பிறப்பித்துள்ள மற்றொரு உத்தரவில், மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரி, மேற்கூறப்பட்டுள்ள அந்த சட்ட விரோத அமைப்பை தடை செய்வதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மாநில அரசிடம் இருக்கும் அதிகாரத்தை செயல்படுத்துவது அவசியம் என்று அரசு கருதுகிறது.

எனவே மத்திய சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967-ன் 42-ம் பிரிவின்படியும், அதன் அடிப்படையில் மத்திய உள்துறை 28-ந் தேதி பிறப்பித்த அறிவிப்பாணையின் படியும், அந்த சட்டத்தின் 7 மற்றும் 8-ம் பிரிவுகளின்படி அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் ஆகியவற்றை சட்ட விரோத அமைப்புகள் என்று தமிழக அரசு அறிவிக்கிறது.இந்த அதிகாரத்தை தமிழகத்தில் உள்ள நகரங்களில் போலீஸ் கமிஷனர்களும், மாவட்டங்களில் கலெக்டர்களும் செயல்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!