இலங்கையில் இன்று முதல் புதிய வரி விதிப்பு அறிமுகம்!

நாட்டில் சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புதிய வரி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.இதன்மூலம், 140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

எவ்வாறாயினும், இந்தப் புதிய வரி விதிப்பால், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இவ்வாறான வரிகள் அரசாங்கங்கள் வருமானத்தை ஈட்டுவதற்குத் தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவிட்த் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், அதன் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன் கீழ் 120 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருடாந்த புரள்வு மீது 2.5 வீதம் வரி அறவிடப்படும்.

இருப்பினும், மருந்துகள், பெற்றோல், டீசல் அல்லது மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, உள்ளூர் உற்பத்தியாளர் அல்லது உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட புதிய பால், மூல இலைகள், இலவங்கப்பட்டை அல்லது உள்ளூர் உற்பத்தியாளர் அல்லது உற்பத்தியாளரிடமிருந்து பெறப்பட்ட இறப்பர் உள்ளிட்ட சில பொருட்களுக்கு சமூக பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீர் மின்சார உற்பத்தி அல்லது மாற்று மின்சாரத் தயாரிப்பு, மருத்துவ சேவைகள், நீர் வழங்கல், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து, தையல் சேவைகள், பயண சேவைகள், ஆயுள் காப்பீட்டு வணிகங்கள், திரையரங்குகள் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் பணம் செலுத்தும் சேவைகள் உட்பட பல சேவைகளுக்கு இந்தப் புதிய வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!