ராஜஸ்தானில் பசு மாடுகளை கடத்தியதாக வாலிபரை அடித்துக் கொன்ற கும்பல்

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் பசு மாடுகளை கடத்தியதாக கூறி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லாலாவண்டி கிராமம் அருகே காட்டுப்பகுதியில் இரண்டு நபர்கள் நேற்று இரவு பசு மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர். இவர்களை மாடு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதி மக்கள் சந்தேகித்து, சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கினர்.

அப்போது ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார். ஒருவர் மட்டும் வன்முறைக் கும்பலிடம் சிக்கிக்கொண்டார். அவரை அந்த கும்பல் சரமாரியாக அடித்ததில் அவர் மயங்கி விழுந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், மயங்கி கிடந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்டவர் அரியானா மாநிலம் கோல்கானைச் சேர்ந்த அக்பர் கான் (வயது 28) என்பது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!