பிரிவினையினை வலுப்படுத்தும் இரண்டு நாடுகளே ஜெனிவா தீர்மானத்துக்கு முயற்சி!

இம்முறை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்னெடுக்கப்படும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு மிக்க குறைவான ஆதரவே கிடைக்கும், என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதற்கான இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையுடன் இணங்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நாளைய தினம் இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், இன்று காலையில் ஜெனிவாவில் இருந்து அமைச்சர் சூம் தொழிநுட்பம் மூலமாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

உண்மைகளை கண்டறியும் பொறிமுறை அவசியம் எனவும், அது உள்ளக பொறிமுறையாக அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், உண்மைகளை கண்டறியும் விதமாக உள்ளக பொறிமுறையை உருவாக்குவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் இது குறித்த பொறிமுறை ஒன்றினை உருவாக்க அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர், பயங்கரவாதத்தடைச் சட்டத்தில் தேவையான மாற்றங்களை செய்துள்ளதாகவும், இச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 200க்கும் அதிகமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இம்முறை பிரேரணையில் பொருளாதார குற்றங்கள் குறித்து தெரிவித்துள்ள போதிலும், பொருளாதார விடயங்களை சுட்டிக்காட்டும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இல்லை என தெரிவித்த அமைச்சர், இலங்கைக்கு எதிராக மேலும் மேலும் குற்றங்களை சுமத்தி இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளவே சர்வதேச தரப்பு முயற்சிப்பதாகவும், பிரிவினையினை வலுப்படுத்தும் பிரதான இரண்டு நாடுகளே இந்த முயற்சிகளின் பின்னணியில் இருந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!