தமிழர்களை அழிக்க நினைத்தால் இறுதியில் நீங்களே அழிந்துபோவீர்கள்! கஜேந்திரகுமார் ஆவேசம்

தமிழர்களை அழிக்க நினைத்தால் இறுதியில் நீங்களே அழிந்துபோவீர்கள் என்று அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.  நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

22 ஆவது திருத்தச் சட்டமூலம்

“அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது நீக்கப்படாமையால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற அச்சத்தாலேயே நேற்று அந்தத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் விவாதத்துக்கு உட்படுத்தவில்லை.

விவாதத்துக்கு உட்படுத்தி வாக்கெடுப்புக்குச் சென்றிருந்தால் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிச்சயமாக இழந்திருக்கும்.இந்நிலையில், எதிர்கட்சிகளில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்க் கட்சிகளின் ஆதரவை அரசாங்கம் கோருகின்ற போதிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குரிய தேவைகளை அரசாங்கம் வேறு விதமாகவே அணுகுகின்றது.

குருந்தூர்மலை

குருந்தூர்மலை விவகாரத்தில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதிமொழி ஒன்றை இந்தச் சபையில் வழங்கியிருந்தார். அனைத்துக் கட்சிகளுடனும் குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் வரை குருந்தூர்மலையில் எவ்வித பணிகளும் முன்னெடுக்கப்படாது என்று அமைச்சர் உறுதியளித்திருந்தார்.எனினும், இன்று அதிகாலை நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அங்கு அளவீடு செய்யும் பணிகளுக்குச் சென்றுள்ளனர்.

1933 ஆம் ஆண்டு குருந்தூர்மலையானது அகழ்வாராச்சிக்குரிய தளமாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது 76 ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்தது.ஆனால், தற்போது 296 ஏக்கர் நிலப்பரப்பு அகழ்வாராச்சிக்கென ஒதுக்குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகினறன. யுத்தம் காரணமாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும் மக்களால் கைவிடப்பட்ட நிலப்பரப்பையே தற்போது அரசாங்கம் அளவீடு செய்து வருகின்றது.

அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டபோது,  குருந்தூர்மலையில் எவ்வித நிர்மாணப் பணிகளும் இடம்பெறாது என அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதியளித்திருந்தார். எவ்வித நிர்மாணப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டாம் என அகழ்வாராய்ச்சி நிறுவனத்துக்கும் நில அளவைத் திணைக்களத்துக்கும் கடிதம் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டது. அனைத்தையும் உதாசீனம் செய்து இன்று நில அளவைத் திணைக்களத்தின் பணியாளர்கள் அங்கு அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ளச் சென்றுள்ளனர்.

மகாவலித் திட்டம்

கொக்கிளாய் முதல் நாயாறு வரையிலான 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் மகாவலித்திட்டம் என்ற பெயரில் அரசாங்கம் செய்த நடவடிக்கைகளை குறித்து நாம் ஏற்கனவே அறிந்திருக்கின்றோம். மகாவலி திட்டத்துக்குள் ஆறு பிரதேச செயலகங்களும் உள்வாங்கப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர்த்து எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாது என்று கூறப்பட்டது.

அதற்காகக் குழுவொன்று நியமிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்து. எனினும், அது பின்னர் மீறப்பட்டது. மகாவலித் திணைக்களம் முழுமையாக இனவாதத் திணைக்களம் என்பதை வராலும் மறுக்க முடியாது. இதனைப் போன்றே இன்று அகழ்வாராச்சி திணைக்களமும் நில அளவைத் திணைக்களமும் வடக்கு, கிழக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறான நிகழ்ச்சி நிரல் வாயிலாக அரசாங்கம் எவ்வாறு வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவைப் பெற முடியும்? இதனை நோக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உண்மை முகம் இப்போதே வெளிப்படுகின்றது.

கடந்த 2002ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க போர் நிறுத்தத்தை அறிவித்த போது வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகள் ரணிலுக்கு ஆதரவாகச் செயற்பட்டன.அது மாத்தரமின்றி நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் எதிர்த்து வலுவிழக்கச் செய்தன.எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தற்போது முழுமையாக இனவாதப்போக்கையே கடைப்பிடிக்கின்றது.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவைக் கோரி நிற்பதாக சர்வதேசத்துக்குத் தெரிவிக்கும் அரசாங்கம் மறுபக்கத்தில் இனவாதத்தைத் தூண்டுகின்றது. சிங்கள மக்களின் ஆதரவை மாத்திரமே முழுமையாக எதிர்பார்த்து அரசாங்கம் செயற்படுகின்றது. இந்தக் கொள்கையை மாற்றிக்கொண்டு பயணிக்க முயற்சிக்காவிட்டால் பாரிய தோல்வியை அரசாங்கம் சந்திக்கும்.இனவாதப்போக்கு கொண்ட இவ்வாறான கொள்கைகள் வாயிலாக தமிழர்களையும், முஸ்லிம்களையும் அழிப்பதற்கு முயற்சித்தால் இறுதியில் நீங்களே அழிந்துபோவீர்கள். இதுவே இன்று இடம்பெறுகின்றது” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!