நீதிமன்றில் முன்னிலையான சனத் நிஷாந்த கடும் எச்சரிக்கையுடன் விடுவிப்பு

உடனடியாக கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தில் இன்று (13.10.2022) முன்னிலையாகியுள்ளார்.
இதனையடுத்து அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் இன்று முற்பகல் அவர் நீதிமன்றில் முன்னிலையாகாததால், இராஜாங்க அமைச்சரை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்பின் மேன்முறையீட்டு நீதிமன்றில் தனது சட்டத்தரணிகள் ஊடாக முன்னிலையாகிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தினமும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். 

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது. 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் சந்தர்ப்பங்களில் நீதிபதிகள் பக்கச்சார்பாக நடந்து கொண்டு பிணை வழங்கியதாக பகிரங்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் சட்டத்தரணிகள் சங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்து சனத் நிஷாந்தவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இது தொடர்பான வழக்கு கடந்த ஐந்தாம் திகதி (05.10.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என சனத் நிஷாந்தவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. 

எனினும் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சனத் நிஷாந்த நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையினாலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!