ராஜபக்ச குடும்பம் கொள்ளையிட்ட பணத்தை கைப்பற்ற வேண்டும்-சஜித் பிரேமதாச

மக்கள் மீது வரி சுமையை சுமத்தாது, ராஜபக்ச குடும்பத்தினர் சுமார் ஒரு தசாப்த காலத்தில், பல்வேறு உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள்,கொடுக்கல் வாங்கல்கள் மூலம் கொள்ளையிட்ட நாட்டின் செல்வத்தை மீண்டும் கைப்பற்றி, அதன் மூலம் அரச வருமானத்தை அதிகரிப்பதே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இருக்கும் ஒரே தீர்வு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொள்ளையிடப்பட்ட டொலர்களை கொண்டு வந்து நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும்

திருடர்களை பிடிப்பதன் மூலம் அவர்கள் கொள்ளையிட்ட டொலர்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டு கொண்டு வந்து நாட்டின் வருமானத்தை அதிகரிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். குருணாகல் நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி என்ற வகையில் அரசியல் பழிவாங்கல்களையோ அல்லது தனிநபரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கல்களையோ ஏற்றுக்கொள்வதில்லை.

எனினும் நாட்டில் கொள்ளையிடப்பட்ட அனைத்து டொலர்களையும் எதிர்காலத்தில் ஆட்சியமைக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் நாட்டிற்கு கொண்டு வருவோம்.
டொலர் நெருக்கடிக்கு தீர்வுகாண தகவல்கள் தொழிற்நுட்பத்துறை நாடு முழுவதும் விஸ்தரிக்க வேண்டும்

எமது அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் பொறுப்பை நிதியமைச்சருக்கும்,திருடர்களை பிடிக்கும் அமைச்சருக்கும் வழங்குவோம். வர்த்தகம், கேள்வி, விநியோகம், அத்தியவசியம் என்ற தற்போதைய பொருளாதாரத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தற்போதை வங்குரோத்து நிலைமையில் இருந்து மீள வேண்டும்.

நாட்டில் தற்போது வட்டி வீதமானது 30 வீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. அரசாங்கம் சாதாரண மக்கள் மீது வரி சுமைகளை சுமத்தாது, கோடிஸ்வர செல்வந்தர்கள் மீது வரி சுமையை சுமத்த வேண்டும்.

நாட்டின் டொலர் நெருக்கடிக்கு தீர்வுகாண தகவல் தொழிற்நுட்பத்துறையை நாடு முழுவதும் விஸ்தரிக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார். 



* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!