பிரித்தானிய பிரதமராகும் ரிஷி சுனக்!

கன்சர்வேட்டி கட்சி தலைவருக்கான போட்டியில் ரிஷி சுனக் வெற்றிபெற்றுள்ள நிலையில், பிரித்தானிய பிரதமராக மிக விரைவில் அவர் பொறுப்பேற்கவிருக்கிறார். கென்ய நாட்டவரான தந்தைக்கும் தான்சானியாவில் பிறந்தவருமான தாயாருக்கும் இங்கிலாந்தில் பிறந்த ரிஷி சுனக் பிரித்தானியாவின் 57வது பிரதமராக பதவியேற்கவிருக்கிறார்.
    
முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக் செவ்வாய்க்கிழமை பிரதமராக பொறுப்பேற்பார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. அரசியலமைப்பு ரீதியாக தற்போதும் பிரதமராக பொறுப்பில் இருக்கும் லிஸ் ட்ரஸ் முறைப்படி முதலில் ராஜினாமா செய்ய வேண்டும்.

திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் மன்னர் சார்லஸ் லண்டன் திரும்புவார் என நம்பப்படுகிறது. இதனிடையே, செவ்வாய்க்கிழமை பகல், உள்ளூர் நேரப்படி 9 மணியளவில் லிஸ் ட்ரஸ் தலைமையில் கடைசியாக ஒருமுறை அமைச்சரவை கூடும்.

தொடர்ந்து, 10.15 மணியளவில் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே ஊடகங்களை சந்திப்பார். நாட்டு மக்களுக்கு நன்றி கூறும் லிஸ் ட்ரஸ், தமது 45 நாட்கள் ஆட்சி தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிப்பார்.

இதனையடுத்து லிஸ் ட்ரஸ் நேரடியாக மன்னரை சந்திக்க செல்வார். தொடர்ந்து அரணமனை நிர்வாகம் புதிய பிரதமரான ரிஷி சுனக் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும். பின்னர் ஆட்சியமைக்க மன்னரால் அழைப்பு விடுக்கப்படுவார்.

தொடர்ந்து மன்னரும் புதிய பிரதமரும் புகைப்படத்திற்கு முகம் காட்டுவார்கள். தொடர்ந்து மன்னரும் நாட்டின் புதிய பிரதமரும் சிறிது நேரம் கருத்துகளை பரிமாறுவார்கள். அங்கிருந்து நேராக பிரதமரின் உத்தியோகப்பூர்வ அலுவலகத்திற்கு திரும்புவார் புதிய பிரதமர் ரிஷி சுனக்.
பகல் சுமார் 11.35 மணிக்கு புதிய பிரதமர் முதல் அறிக்கையை வெளியிடுவார். தொடர்ந்து முதல் புகைப்படத்திற்கு பிரதமர் ரிஷி சுனக் முகம் காட்டுவார். இந்த நிகழ்வில் பிரதமரின் மனைவி அக்‌ஷதா மற்றும் இரு மகள்கள் உடன் இருப்பார்கள் என்றே நம்பப்படுகிறது.


தொடர்ந்து பிரதமர் இல்லத்திற்கு செல்லும் ரிஷி சுனக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் வரவேற்கப்படுவார். இதனையடுத்து அமைச்சரனை உறுப்பினர்கள் தெரிவு நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். புதன்கிழமை ரிஷி சுனக் தனது முதல் நாடாளுமன்ற அவையினை எதிர்கொள்வார் என்றே தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!