அரசியல் என்ற வார்த்தையை வெறுக்கும் மக்கள்-அமைச்சர் ரொஷான் ரணசிங்க

நாட்டு மக்கள் கட்சி அரசியலை அருவருப்புடன் நிராகரிக்கும் சூழல் நாட்டில் உருவாகியுள்ளதாக விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். மகிந்தவுடன் மீண்டும் எழுவோம் என்ற அரசியல் மேடையில் ரொஷான் ரணசிங்கவை காணமுடியாதது குறித்து கண்டியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது அரசியல் செய்யும் நேரமல்ல

என்னை பொறுத்தவரையில் இது அரசியல் செய்யும் நேரமல்ல. இந்த நேரத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்காது, அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் முக்கியமான பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அரசியல் என்ற வார்த்தை மக்களுக்கு அருவருப்பாகியுள்ளது. குறிப்பாக கட்சி அரசியல் நாட்டு மக்களுக்கு கசந்த போயுள்ளது. நாட்டு மக்கள் தற்போது கோருவது கட்சி அரசியலையோ, அரசியல் செயற்பாடுகளையோ அல்ல.நாட்டை பொருளாதார ரீதியாக முன்நோக்கி கொண்டு செல்லும் முறையான செயற்பாடுகளையே மக்கள் கோருகின்றனர் எனவும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான ரொஷான் ரணசிங்க, அந்த கட்சியின் பொலன்நறுவை மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார்.அத்துடன் அவர் அந்த கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருந்து தற்போது ஒதுங்கிள்ளார். மேலும் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து எதிர்கால அரசியலை முன்னெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.இதன் காரணமாகவே அவர்  தற்போது நடத்தி வரும் மகிந்தவுடன் மீண்டும் எழுவோம் என்ற கூட்டங்களில் கலந்துக்கொள்வதில்லை என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!