போராட்டத்தில் சஜித் கலந்துக்கொள்வதை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சி

மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்திற்கு அருகில் நேற்று ஆரம்பமான எதிர்க்கட்சி நடத்திய எதிர்ப்பு பேரணியில் சஜித் பிரேமதாச கலந்துக்கொள்வதை தடுக்க பொலிஸார் நேற்று அதிகாலை முதல் பெரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என அழுத்தம்

இதனடிப்படையில், பல்வேறு நபர்களை கொண்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதுடன் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என அறிவித்து பொலிஸார் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

இந்த கடிதம் கிடைத்த பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி, எதிர்ப்பு போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துக்கொள்ள வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

பல்வேறு தரப்பினர் இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்த எதிர்ப்பு போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துக்கொள்ள தேவையில்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் ஒதுங்கி இருக்க முடியாது

இந்த நிலையில், அடக்குமுறை முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் ஒதுங்கி இருக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது கூறியுள்ளார்.

இதனால், ஜனநாயகத்திற்காக தான் போராட்டத்தில் கலந்துக்கொள்ள போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என பொலிஸார் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பிய கடிதம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!